மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சிவகங்கை தொகுதியில் வெற்றிபெற்றதை எதிர்த்து அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அதிமுகவைச் சேர்ந்த ராஜ கண்ணப்பன் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது:
சிவகங்கை மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டேன். இதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரம் போட்டியிட்டார். இதில் ப.சிதம்பரம் சுமார் 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றுள்ளது.
வாக்கு எண்ணிக்கையின்போது பல சுற்றுகளில் நான் முன்னிலையில் இருந்தேன். ஆனால் இறுதியில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதை எதிர்த்து தேர்தல் கமிஷனிடம் புகார் கொடுத்தேன். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே கோர்ட் தலையிட்டு ப.சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும். இவ்வாறு வழக்கில் ராஜ கண்ணப்பன் கூறியுள்ளார். இந்த மனுவை ராஜகண்ணப்பன் சார்பாக வக்கீல் ஜி.சரவணகுமார் தாக்கல் செய்தார். விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். ராமநாதபுரத்தில் திமுக வேட்பாளர் ஜே.கே.ரித்திஷ் வெற்றி பெற்றதை எதிர்த்து அதிமுக வேட்பாளர் சத்தியமூர்த்தியும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
Leave a Reply