முட்டிக் கொள்பவர்களில் முன்னவள் பெயர் பெர்கனே, பின்னவள் பெயர் பெர்கமோட். மாமியார் – மருமகள் சண்டையா என்ன? அதைவிட பெரிய லட்சியம்ங்க. சுவிட்சர்லாந்து நாட்டின் பசுக்களில் யார் இந்த வருட இளவரசி என்கிற பட்டத்திற்காகத்தான் இதுகள் இரண்டும் முட்டி மோதிக்கொள்கின்றன.
இந்தப் பசுக்களை போல், நூற்றுக்கணக்கான பசுக்கள் சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையின் மேலே கூடி, இளவரசி பட்டத்திற்காக முட்டி மோத காத்திருக்கின்றன.
நம்ம ஊர் ஜல்லிக்கட்டு போபோல் சுவிட்சர்லாந்தின் காளைச்சண்டையும் பிரசித்தி பெற்றது. காளைச்சண்டை எப்படியோ வருடந்தோறும் நடக்கும் பசு இளவரசி போட்டியும புகழ்பெற்றது.
ஜூன் மாதத் துவக்கத்தில் துவங்கும் இந்த ‘கலகல’ போட்டியில் கலந்துகொள்ள ஏராளமான அழகிகளும் (பசுக்கள்தான்), ரசிகர்களும் ஆல்ப்ஸ் மலை மேல் குவிவார்கள்.
இந்த ஆண்டு பசு இளவரசி போட்டி துவங்கிவிட்டது.
காலங்காலமாக நடைபெற்றுவரும் இந்த போட்டிக்காகவே பசுக்களை திண்னென்று வளர்க்கிறார்கள் இங்கே. ஆல்ப்ஸ மலைக்கு மேலே 9 ஆயிரம் அடி உயரத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. குறிப்பாக சுவிட்சர்லாந்தின் தெற்கு கேண்டான் பகுதியில் வளரும் ஹெரன்ஸ் இன பசுக்கள் அழகுக்காகவே பிறந்துபோல், கட்டுமஸ்தான தேகத்துடன் பார்க்க பொலிவுடன் தோற்றமளிக்கின்றன. இந்த இனத்தைச் சேர்ந்த பசுக்கள் தான் பெரும்பாலும் பசு இளவரசியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
போட்டியைக் கண்டு சரியான அழகுராணியை தேர்ந்தெடுக்க நடுவர்கள் உண்டு. ரசிகர்களும் வைன் குவளையுடன் மலை மேடுகளில் அமர்ந்துவிடுகின்றனர்.
பசுக்களின் தோற்றம், அவை மோதும் பாங்கு, அதன் நடை, பாவனை என்று எல்லாவற்றிற்கும் மதிப்பெண் உண்டு. மாட்டுப் பொங்கலன்று நம் மாடுகளை அலங்கரிப்பது போல், போட்டிக்கு முன்னர் இந்த பசுக்களும் தத்தம் முதலாளிகளால் அலங்கரிக்கப்படுகின்றன.
இளவரசி பட்டம் பெறும் பசு அழகிக்குப் பரிசு எதுவும் கிடையாது. ஆனால் ஊட்டி வளர்த்து, ஆளாக்கி, அழகாக்கி, இளவரசியாக்கிய அதன் முதலாளிக்குப் பரிசாக 30 ஆயிரம் டாலர் வரை கிடைக்கும். இந்த தொகையைப் பெறவேண்டுமானால் அந்த பசுவை அவர் விற்கத் தயாராக இருக்கவேண்டும். விற்றால்தான் இந்த தொகை கிடைக்கும். சாதாரணமாக இத்தனை தொகை ஓரு பசுவுக்கு கிடைக்காது என்பதால் இத்தகைய ஏற்பாடு.
அதுமட்டுமல்ல, இளவரசியாகத தேர்ந்தெடுக்கப்பட்ட பசுவின் முதலாளி, அந்த கிராமத்தின் அந்த வருட ராஜாவாகக் கருதப்படுவார். அந்த ஊர் மேயரை விட அதிக மரியாதையை அவர் பெறுவார்.
ஆல்ப்ஸ் மலையின் பள்ளத்தாக்கில் பசுக்களை நம்பி மட்டுமே ஏராளமான கிராமங்கள் உள்ளன. பசுக்கள்தான் இவர்களுடைய பொருளாதார ஆதாரம். அதைக் கொண்டாடும் வகையில், பசு இளவரசி போட்டி தவறாமல் நடத்தப்படுகிறது.
Leave a Reply