கொழும்பு : முல்லைத் தீவில் விடுதலைப் புலிகள் பதுக்கி வைத்திருந்த நூறு கிலோ தங்க நகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இலங்கை ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது: முல்லைத் தீவில் நடந்த இறுதிக் கட்ட தாக்குதலுக்கு பின், விடுதலைப் புலிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டனர். அந்த பகுதியில் தற்போது ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள புலிகள் அமைப்பை சேர்ந்த சிலர் அளித்த தகவலின் பேரில், வெள்ளமுள்ளிவாய்க்கால் என்ற இடத்தில் ராணுவம் தேடுதல் வேட்டை நடத்தியது. இதில், புலிகள் பதுக்கி வைத்திருந்த நூறு கிலோ தங்க நகைகள் மற்றும் 64.91 லட்சம் பணம் கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை ராணுவ வீரர்கள் கைப்பற்றினர். தங்க நகைகள் பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தன. வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் தான், சண்டையின்போது புலிகளின் முக்கிய தலைவர்கள் பதுங்கி இருந்தனர். ஏற்கனவே சண்டை நடந்தபோது, புலிகளின் கடற்பிரிவு தலைவர் சூசையின் குடும்பத்தினர் தப்பிச் சென்றனர். அவர்களை ராணுவம் சுற்றி வளைத்து கைது செய்தது. அப்போது, அவர்களிடம் இருந்து ஏராளமான பணம் கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, ராணுவத்தின் தேடுதல் வேட்டையில் புலிகள் பதுக்கி வைத்திருந்த கையெறி குண்டுகள், வெடி குண்டுகள், பீரங்கி குண்டுகள், பாஸ்பரஸ் குண்டுகள், சிறிய ரக ஏவுகணைகள் கைப்பற்றப்பட்டன. இவ்வாறு ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
Leave a Reply