மாணவர்களின் பாடசுமையை குறைக்கும் வகையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது. மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபில், தனது அமைச்சக கொள்கை முடிவை வெளியிட்டு, 100 நாட்களில் இது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மாநில கல்வி வாரியங்களுடன், ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு தேவையா? தேவையில்லையா? இங்கு பெற்றோர், ஆசிரியர், மாணவர் மனந்திறக்கிறார்கள்…
மதுரை
எஸ்.முகமது பாசில் (10ம் வகுப்பு மாணவர்): பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஒரு போதும் ரத்து செய்யக்கூடாது. ஆறாம் வகுப்பில் சேர்ந்ததில் இருந்து, பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வையே லட்சியமாக கொண்டு படிக்கிறோம். தேர்வு ரத்து என்ற நிலை ஏற்பட்டால், லட்சியம் இல்லாமல் படிக்கும் நிலையே ஏற்படும்.
பழனிதுரை (ஆசிரியர்): பள்ளியில் நடத்தும் தேர்வு முடிவுகள் வரும் போது, மாணவனுக்கு கல்வி பயம் நீங்கி விடுகிறது. இது போல் அரசு துறை சார்பில் நடைபெறும் தேர்வுகளால் மட்டுமே மாணவனுக்கு ஆத்மார்த்தமாக படிக்க வேண்டிய உந்துதல், கட்டுக்குள் கொண்டுவரும் சூழ்நிலைகள், தன்னம்பிக்கை, சுயபரிசோதனைக்கான வாய்ப்பு என பன்முகத்தன்மை கிடைக்கிறது. எனவே இந்த தேர்வு முறைகளை ஒரு சுமையாக கருதக் கூடாது. படிக்கும் மாணவனுக்கு தேர்வும் ஒரு படிப்புதான்.
அழகுசுந்தரம்(பெற்றோர்-வர்த்தகர்): ஒரு மாணவனின் வளர்ச்சியை நிர்ணயிக்கும் கட்டமே பத்தாம் வகுப்பு தேர்வு தான். மருத்துவம், பொறியியல், விவசாயம், தொழில் நுட்பம் என மாணவனும், பெற்றோரும் முடிவு செய்வதற்கான, ஒரு துவக்கமே இந்த தேர்வு தான். இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டால் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., போன்ற தொழில் கல்விக்கு மாணவர்கள் கூடுதலாக இரண்டு ஆண்டுகள் படிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படும். எனவே தேர்வை ரத்து செய்யக்கூடாது.
திண்டுக்கல்
பிளேசி (ஆசிரியர், டட்லி மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்): கிராமப்புறத்தில் சரியான வசதி இல்லாமல் படிக்கும் மாணவர்கள்,நகர் பகுதியில் அபரிமிதமான வசதிகளுடன் படிக்கும் மாணவர்களுடன் போட்டியிடும் சூழ்நிலை இதன் மூலம் அகற்றப்படுவது வரவேற்க கூடிய விஷயம். பத்தாம் வகுப்பு கற்றுத்தரும் ஆசிரியர்கள்,மாணவர்களை மட்டுமின்றி அவர்களின் குடும்பத்தினரையும் ஒரு ஆண்டு முழுக்க அறிவுறுத்தி, வழிநடத்த வேண்டிய நிர்பந்தம் இதன் மூலம் மாறி விடும். எனவே ஆசிரியர்களுக்கு இது மிகப்பெரிய நிம்மதியான விஷயம்.
பிரேம்குமார் (ஒன்பதாம் வகுப்பு மாணவர், திண்டுக்கல்): படிப்பு எங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நிர்பந்தம் ஏதுமின்றி அமைய வேண்டும். நிச்சயம் எல்லா மாணவர்களும் நன்றாக படிக்கவே விரும்புகின்றனர். அரசு தேர்வு போன்ற கடும் நிர்பந்தங்கள் அச்சத்தையும்,போட்டி காரணமாக பதட்டத்தையும் ஏற்படுத்தி மனநிலையில் குழப்பத்தை ஏற்படுத்தி விடுகிறது.சில பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பிலேயே பத்தாம் வகுப்பு பாடங்களையும் நடத்தி, எங்களை ஒரே ஆண்டில் இரண்டு ஆண்டுகளுக்கான பாடங்களை படிக்குமாறு நெருக்கடி கொடுக்கும் நிலை மாறும். எனவே அரசு தேர்வை ரத்து செய்து கிரேடு முறையில் மாணவர்களுக்கு இலக்கு நிர்ணயித்தால் நிச்சயம் நாங்கள் வெற்றிப்படிகளை பதட்டமின்றி கடந்து விடுவோம்.
அமுதா (ஒன்பதாம் வகுப்பு மாணவியின் தாய்): ஓரிரு மார்க்குகளில் மாணவர்கள் வாழ்க்கை திசை மாறுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். எனவே என் மகள் 8ம் வகுப்பு தேறிய உடனே எங்கள் வீட்டில் ஏதோ ஒரு பதட்டம் தொற்றி, இயல்பான வாழ்வியல் முறையை பாதித்து விட்டது. என் மகளை தினமும் படிக்குமாறு எங்களுக்கு விருப்பம் இல்லாமல் நெருக்கடி கொடுக்க தொடங்கினோம். இப்போது தேர்வு இருக்காது என்ற அறிவிப்பு மிகப்பெரிய மன ஆறுதலை கொடுக்கிறது. படிக்க ஆர்வம் உள்ள மனோபலம் குறைவாக உள்ள மாணவர்களுக்கு இதனை விட நல்ல செய்தி வேறு இல்லை. கிரேடு முறை நல்ல பலன் தரும் என்ற நம்பிக்கை உள்ளது.
தேனி
சங்கரப்பன் (தலைமை ஆசிரியர்என்.எஸ்., மேல்நிலைப்பள்ளி, தேனி): பத்தாம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்ய தீர்மானித்திருப்பது, கிரேடிங் சிஸ்டம் வரவேற்கத்தக்கது. பக்குவமான வயது இல்லாத நிலையில் மாணவர்களுக்கு பொது தேர்வு பதட்டத்தை ஏற்படுத்துகிறது. விருப்ப அடிப்படையில் தேர்வு எழுதலாம் என்ற முடிவு குழப்பத்தை ஏற்படுத்தும். பள்ளிகளில் உள் மதிப்பீட்டு தேர்வு நடத்தும் போது தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்ற குறுக்கீடு இருக்க கூடாது.
ஐஸ்வர்யா (மாணவி, மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக்., பள்ளி, முத்துத்தேவன்பட்டி): பத்தாம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்யக்கூடாது. பள்ளி அளவில் நடத்தப்படும் தேர்வில் மாணவர்களின் தனித்திறன் வெளிப்பட வாய்ப்பு இல்லை. பிளஸ் 2 தேர்வு எழுதும் முன் மாணவர்கள் தங்களை மதிப்பீடு செய்யவும், மதிப்பெண் தகுதிக்கு ஏற்ப மேல்படிப்பிற்கான பாடத்தை தேர்வு செய்யவும் பொது தேர்வு உதவுகிறது.
பாலகிருஷ்ணன், (பெற்றோர், தேனி): மேற்படிப்பை தேர்வு செய்வது பத்தாம் வகுப்பு பொது தேர்வின் அடிப்படையில்தான். பொது தேர்வு ரத்து செய்தால் மாணவர்களின் படிப்பு ஆர்வம் குறைந்து விடும். பொருளாதார, சமூக ஏற்றத்தாழ்வு, சிபாரிசு அடிப்படையில் மேற்படிப்பிற்கான குரூப் வழங்கும் நிலை ஏற்பட்டுவிடும்.
ராமநாதபுரம்
நாகலெட்சுமி (முதல்வர் , செய்யதம்மாள் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்): பிளஸ் 2 பொதுதேர்வை சந்திக்க பத்தாம் வகுப்பு தேர்வு நல்ல அனுபவமாக இருக்கும் என்பதால், மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அவசியமானதாகும். 6-9 வகுப்புகள் போல பத்தாம் வகுப்பும் இருக்குமேயானால் , மாணவர்களுக்கு பொறுப்பு குறையும்நிலை ஏற்படும். மாணவரின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் பத்தாம் வகுப்பு முக்கிய அங்கம் வகிக்கிறது.
ரேவதி அபர்ணா(ஒன்பதாம் வகுப்பு மாணவி, டி.டி.விநாயகர் மேல்நிலைப் பள்ளி,ராமநாதபுரம்): பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வு இல்லை என்றால் மாணவர்களுக்கு கவனம் சிதறும். இதனால் மேல்படிப்பு பாதிக்கும். அந்த மதிப்பெண் மூலம் மாணவர்கள் தரம் பிரிக்கப்பட்டால் மட்டுமே அவர்களது எதிர்காலம் சிறப்பாக அமையும். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து பயன்பெறுவதற்கும் , ஐ.டி.ஐ., பாலிடெக்னிக்., போன்ற டிப்ளமோ படிப்பிற்கும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் இன்றியமையாததாக இருக்கும். சுமாராக படிப்பவர்கள் பத்தாம் வகுப்புடன் தொழிற்கல்வியை நாடுகின்றனர். நன்கு படிக்கும் மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண் கூடுதல் பொறுப்பை தரும் என்பதால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அவசியமானதாகும்.
நடராஜன்(பெற்றோர், ராமநாதபுரம்): பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் கூடுதல் சுமைதான். இதில் மெட்ரிக்.,மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பத்தாம் வகுப்பில் பிளஸ் 2 போல பாடங்களை படிக்கும் நிலை உள்ளது. இதனால் மாணவர்கள் மனநிலை இறுக்கம் அடையும். சுமையால் அவதிப்படும் மாணவரை நினைத்து அவனது பெற்றோர்கள் கவலை அடைவார்கள். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது வரவேற்க கூடியதாகும். ரத்து செய்யாவிடில் மெட்ரிக்., என்ற பாகுபாடி இல்லாமல் சமச்சீர் கல்வி முறை அமல்படுத்த வேண்டும்.
சிவகங்கை
ஆர்.சுவாமிநாதன் (புதுவயல் ஸ்ரீவித்யாகிரி மெட்ரிக்., பள்ளி முதல்வர்): செயல்முறை கல்வி மூலம் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தினால் ஆர்வத்துடன் படிப்பர். அவர்களிடம் மன அழுத்தமும் ஏற்படாது. பொதுத்தேர்வு இல்லை என்றால் ஆர்வம் குறையும். இந்ததேர்வை ரத்து செய்யும் பட்சத்தில் மாணவர்களின் அறிவை வளர்க்க “”கொள்குறிவகை தேர்வு”நடத்தலாம். ஆசிரியர்கள் கற்றுத்தரும் பாடங்களை மாணவர்கள் எந்தளவு புரிந்துள்ளார்கள் என அறிய, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை பள்ளியில் “அசெஸ்மென்ட்’ தேர்வு நடத்தவேண்டும்.
பி.சத்யப்பிரியா (மருதுபாண்டியர் நகர் அரசு பள்ளி, சிவகங்கை): பொதுத் தேர்வை ரத்து செய்ய கூடாது. இந்த தேர்வுதான் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு வழிகாட்டியாக உள்ளது. அதிக மதிப்பெண் பெறுவதற்கும், நன்றாக படிப்பதற்கும் திட்டமிடுவதில் இத்தேர்வு ஒரு அளவுகோலாக உள்ளது. தேர்வை ரத்து செய்தால் மாணவர்களிடையே ஒருவித அலட்சியம் உருவாகும். கல்வித்தரம் குறைய வாய்ப்பு உள்ளது. பிளஸ் 1, 2 வகுப்பு பாடங்கள் புரிய வேண்டும் என்றால், பத்தாம் வகுப்பில் நன்றாக, புரிந்து படித்திருக்க வேண்டும். பொதுத்தேர்வு இல்லாதபட்சத்தில், பிளஸ் 2 வகுப்பில் மாணவர்கள் குறைந்த மதிப்பெண் பெறுவதற்கும், தோல்வி அடைவதற்கும் வாய்ப்பு ஏற்படும்.
எம்.காசிவிஸ்வநாதன் (பத்தாம் வகுப்பு மாணவரின் தந்தை, சிவகங்கை): பொதுத்தேர்வால் மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். பத்தாம் வகுப்பில் தோல்வியடையும் மாணவர்கள், விரக்தி அடைந்து எதிர்காலமே பாழாகும் நிலையும் உள்ளது. இதற்கு மாற்றாக பொத்தேர்வு ரத்து குறித்த யோசனை வரவேற்கத்தக்கது. விரும்பிய மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படுவதன் மூலம் எதிர்காலத்தை அவர்களாகவே தீர்மானிக்கும் நிலை உருவாகும்.
விருதுநகர்
கார்த்திக் ராஜா (விருது நகர் சுப்பையா நாடார் நகராட்சி பள்ளி மாணவர்): அரசு பொது தேர்வு ரத்து என்பது மாணவர்களின் படிக்கும் ஆர்வத்தை குறைப்பதாகும். பத்தாம் வகுப்பு பொது தேர்வு வைத்தால் தான் மாணவர்கள் கஷ்டப்பட்டு படிப்பார்கள். தேர்வு பயம் இல்லாவிட்டால் எப்படியும் ஆசிரியர்கள் தேர்ச்சி போட்டு விடுவார் என்ற மந்த நிலை மாணவர்களுக்கு ஏற்படும்.
சம்பத்ராஜா (நகராட்சி பள்ளி தமிழாசிரியர்): அரசு குறைந்த பட்ச கல்வித்தகுதியாக பிளஸ் 2 என நிர்ணயித்துள்ளது. எனவே பத்தாம் வகுப்பில் பொது தேர்வில் வடிகட்டுவது தேவையில்லாதது. புதிய முறையால் மாணவர்கள் தேர்வு பயமில்லாமல் படிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. கட்டாயப்படுத்தி மாணவர்களிடையே திணிப்பதை காட்டிலும் சுதந்திரமாக விட்டால் நல்ல முறையில் படிப்பார்கள். தேவைப்பட்டால் விருப்பமுள்ளவர்கள் அரசு பொது தேர்வு எழுதலாம் என்பது வரவேற்கதக்கது.
ஜான்சி (தர்காஸ் தெரு வை சேர்ந்த பெற்றோர்): அரசு பொது தேர்வு இருந் தால் தான் குழந்தைகளின் தரத்தினை அறிந்து கொள்ள முடியும். தற்போது பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 என இரண்டு வாய்ப்புகள் உள் ளன. இனி ஒரு வாயப்பு தான் கிடைக்கும். மேலும், முதல் வகுப்பு முதல் கட்டுப்பாடு இல்லாமல் மாணவர்கள் இருப்பதால் படிப்பு தரம் குறையும் நிலை ஏற்படும்.
ஆசிரியர் இயக்கங்கள் கூறுவது என்ன?
எஸ்.பாஸ்கரன் (தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மதுரை மாவட்ட செயலாளர்): புதிய திட்டத்தால் மாணவர்களின் மனஅழுத்தம் குறைய வாய்ப்பு இருப்பது உண்மையே. அமல்படுத்தினால் நல்லதுதான். பல பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் தேர்வு அடிப்படையில் மதிப்பெண் பெறுவதையே நோக்கமாக கொண்டு நடத்துகின்றனர். தேர்வு இல்லையெனில் மாணவர்கள் கல்வி, தொழில், திறன், விளையாட்டு என பலதுறைகளிலும் திறமையை வளர்க்க வாய்ப்பு கிடைக்கும். இதனால் மாணவர்களின் அனைத்து திறன்களையும் வெளிக்கொணர முடியும். வெறும் மதிப்பெண்களால் சிறந்த மாணவர்களை உருவாக்க முடியாது.
எம். நமச்சிவாயம் (மதுரை மாநகராட்சி அனைத்து ஆசிரியர் மன்ற பொதுசெயலாளர்): பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து என்பது அருமையான திட்டம். நுழைவுத் தேர்வு இருந்தால்தான் சிறந்த மாணவர்கள் பி.இ.யில் சேர முடியும் என்றிருந்ததை ரத்து செய்தனர். அதேபோல இதனையும் ரத்து செய்யலாம். இதில் மாணவர்களின் திறமைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். மனப்பாட முறைக்கு முடிவு கட்டப்படும். மாணவர்களின் மனவளம் பெருகுவதுடன், தன்னம்பிக்கை வளரும்.
Leave a Reply