புதுடில்லி: உள்ளூர் பஸ் இன்னும் வரலியா… கவலையே வேண்டாம்; மொபைல் போனை எடுங்க; பட்டனை அழுத்துங்க; திரையில் பாருங்க, எந்தெந்த பஸ், எங்கே வந்து கொண்டிருக்கிறது என்பது தெரியும். ஆனால், இந்த வசதி, சென்னையில் அல்ல; டில்லியில்.
அடுத்தாண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடப்பதால் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. டில்லி மாநகரில் ஓடும் பஸ்கள் பற்றிய விவரம் ஏற்கனவே, மொபைல் போனில் பார்த்துக் கொள்ளலாம். அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். அப்படி செய்தால், அடுத்த சில வினாடிகளில், விவரம் கிடைக்கும். ஆனால், இப்போது எல்லா பஸ்களையும், “குளோபல் பொசிஷனிங் சிஸ்டம்’ (ஜி.பி.எஸ்.,) மூலம் இணைத்து வருகிறது டில்லி போக்குவரத்து அமைப்பு. சென்னையை போலவே, தாழ்தள மற்றும் குளிர்சாதன வசதி பஸ்கள் அங்கு ஓடுகின்றன. முதல் கட்டமாக இந்த செயற்கைக்கோள் தொழில்நுட்ப வசதி, இந்த வகை உயர் ரக பஸ்களில் பொருத்தப்பட்டுள்ளது. நிறுத்தத்தில் நிற்கும் ஒருவர், குறிப்பிட்ட எண் பஸ் வரவில்லை என்றால், உடனே மொபைல் போனில், “54545′ என்ற எண்ணுக்கு டயல் செய்தால் போதும்; அடுத்த வினாடியே விவரம் தெரியும். அடுத்த சில மாதங்களில் எல்லா பஸ்களையும் ஜி.பி.எஸ்., வரம்புக்குள் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. அப்படி செய்து விட்டால், எந்த பஸ் தாமதமாகிறது என்பதையும் கண்காணிக்க முடியும் என்று அதிகாரிகள் நினைக்கின்றனர். குறிப்பிட்ட பஸ் எங்கே வந்து கொண்டிருக்கிறது, எவ்வளவு தாமதமாக வருகிறது போன்ற விவரங்களை மொபைல் போனில் பார்த்துக் கொள்ளலாம். இதனால், மொபைல் போனை பார்த்து விட்ட பின்னே, பஸ் நிறுத்தத்துக்கு கிளம்பலாம்.
Leave a Reply