லண்டன்:பிரேசில் நாட்டில், அட்லாண்டிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான ஏர் பிரான்ஸ் விமானத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல் கட்டமாக தலா 12 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட உள்ளது. பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரிலிருந்து கடந்த முதல் தேதி, 228 பேருடன் பாரிஸ் புறப்பட்ட ஏர் பிரான்ஸ் விமானம் அட்லாண்டிக் கடலில் விழுந்து நொறுங்கியது.
இன்னும் 50 பேரின் சடலங்கள் கூட மீட்கப்பட வில்லை. விமானத்தின் கறுப் புப் பெட்டியும் கிடைக்கவில்லை. எனவே, இந்த விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.இந்நிலையில் ஏர் பிரான்ஸ் நிறுவனம், விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு இழப்பீடு தர வேண்டிய நிலையில் உள்ளது. இது குறித்து இந் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பால் ஹென்ரி கூறியதாவது:
விமானத்தில் பயணித்தவர்களின் 1,800 உறவினர்களிடம் தொடர்பு கொண்டுள்ளோம். இந்த விமானத்தில் 32 நாடுகளை சேர்ந்தவர்கள் பயணித்துள்ளனர். விமானத்தில் பயணித்தவர்கள் அவர்களது மொபைல் போன் எண்களை தான் தந்துள்ளனர். இறந்த பயணிகளுடன் மொபைல் போனும் கடலில் மூழ்கியுள்ளன. எனவே, விபத்தில் இறந்தவர்களின் அனைவரது உறவினர்களையும் இன் னும் எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை.
கண்டறியப்பட்டுள்ள உறவினர்களுக்கு முதல் கட்டமாக 12 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்க இருக்கிறோம்.பிரான்ஸ் நாட்டு பயணிகளின் உறவினர்கள் பலர் எங்கள் நிறுவனத்தின் மீது கோபமாக உள்ளனர்.இவ்வாறு ஹென்றி பால் கூறினார்.
Leave a Reply