சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் முதல்முறையாக பிரெஞ்ச் ஓபன் கோப்பையைக் கைப்பற்றினார்.
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் போட்டிகள் கடந்த இருவாரங்களாக பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்து வந்தது. போட்டியின் இறுதி நாளான நேற்று ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் உலகின் இரண்டாம் நிலை வீரரான ரோஜர் பெடரரும் 23ஆம் நிலையவீரரான சுவீடனின் ராபின் சோடர்லிங்கும் மோதினர்.
தொடக்கம் முதலே ஆதிக்க செலுத்திய பெடரர் முதல் செட்டை மிக எளிதாகக் கைப்பற்றினார். அடுத்த இரு செட்களையும் சற்று போராடி கைப்பற்றினார். இறுதியில் 6-2, 7-6 (7-1), 6-4 என்ற செட் கணக்கில் பெடரர் வெற்றிபெற்று பிரெஞ்ச் ஓபன் கோப்பையை வென்றார்.
ஆண்டுதோறும் நடந்து வரும் 4 கிராண்ட்ஸ்லாம்களில் பெடரர் இதுவரையில் ஆஸ்திரேலிய ஓபனை 3 முறையும், விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபனை தலா 5 முறையும் வென்று உள்ளார்.
ஆனால் களிமண் தரையில் நடக்கும் பிரெஞ்ச் ஓபன் கோப்பையை வெல்வது அவருக்கு வெறும் கனவாகவே இருந்தது. தற்போது அக்கோப்பையையும் வென்று உலகச் சாதனை படைத்துவிட்டார் ரோஜர் பெடரர். இதற்கு முன்பாக பிரெட் பெர்ரி, டான் புட்கே, ராட்லாவர், ராய் எமர்சன், ஆந்த்ரே அகாசி ஆகியோர் அனைத்து கிராண்ட்ஸ்லாம் போட்டிகளையும் வென்று உள்ளனர். இந்தச் சாதனையாளர்களுடன் தற்போது ரோஜர் பெடரரரும் இணைந்துகொண்டார்.
அதேப்போல 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களைக் கைப்பற்றியுள்ள பீட் சாம்ப்பிராசின் சாதனையை நேற்று சமன் செய்தார் ரோஜர் பெடரர். பிரெஞ்ச் ஓபனை வென்றதன் மூலம் 27 வயதான ரோஜர் பெடரர், தனது 14வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.
Leave a Reply