வாணியம்பாடி: வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ரூ. 3 லட்சம் பணம் கேட்டு கடத்தப்பட்ட பிளஸ்டூ மாணவன் படுகொலை செய்யப்பட்டு, சாக்குப் பையில் வைத்து வீசப்பட்ட சம்பவத்தில் துப்பு துலங்கியுள்ளது. பெண் உள்ளிட்ட நான்கு பேர் சிக்கியுள்ளனர்.
முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஆங்காங்கு நடந்து வரும் பயங்கர படுகொலைச் சம்பவங்கள் மக்கள் நெஞ்சை பதறடித்து வருகின்றன.
சென்னையில் தலை வேறு, கை வேறு, கால் வேறு, உடல் வேறு என மிகக் கொடூரமாக சுரேஷ்குமார் என்பவர் கொல்லப்பட்டனர்.
அதேபோல சென்னை அருகே மின்வாரிய ஊழியரின் மனைவியை தண்ணீருக்குள் அமுக்கி கொலை செய்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
அதி உயர் பாதுகாப்பு சிறையாக கருதப்படும் புழல் சிறைக்குள் பிரபல ரவுடி வெல்டிங் ரவி கம்பிகளால் குத்திக் கொல்லப்பட்டார்.
இந்த நிலையில், வாணியம்பாடி அருகே காண்டிராக்டரின் 17 வயது மகனை கடத்தி, ரூ. 3 லட்சம் பணம் கேட்டு அது கிடைக்காததால் ஆத்திரத்தில் கொன்று, சாக்குப் பையில் பிணத்தை வைத்து வீசி விட்டுச் சென்றனர் கொடூரக்காரர்கள்.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள கணவாய் புதூரை சேர்ந்தவர் மணி. கட்டிட காண்டிராக்டர். இவரது மகன் தினேஷ். இவர் வாணியம்பாடியை அடுத்த ஜனதாபுரத்தில் உள்ள புனிதபால் மேல் நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த திங்கட்கிழமை தினேஷ் வழக்கம் போல பள்ளிக்கூடத்துக்கு சென்றிருந்தார். மாலையில் பள்ளிக் கூடம் முடிந்து அவர் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். பள்ளிக் கூடத்தை கடந்த சிறிது நேரத்தில் கார் ஒன்று அவரை வழி மறித்தது.
அதில் இருந்து இறங்கிய மர்ம மனிதர்கள் தினேசை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச்சென்றனர். கண் இமைக்கும் நேரத்துக்குள் நடந்த இந்த கடத்தல் சம்பவம் நேரில் பார்த்தவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது.
தகவல் கிடைத்ததும் மணி மற்றும் தாயார் வசந்தா ஆகியோர் கதறித் துடித்தனர். பல பகுதிகளிலும் பிள்ளையைத் தேடிப் பார்த்தனர். இந்த நிலையில் அன்று இரவு மணியின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது.
அதில் பேசிய மர்ம நபர், தினேசை நாங்கள் தான் கடத்தி வந்துள்ளோம். 3 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் விடுவிப்போம். போலீசாரிடம் தெரிவித்தால் தினேசை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளான்.
அடுத்தடுத்து ஐந்து முறை செல்போனில் இவ்வாறு பேசி மிரட்டினர்.
இதையடுத்து போலீஸை அணுகினார் மணி. போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கினர். விசாரணையில், வேலூரை அடுத்த சித்தேரி மற்றும் கிருஷ்ணகிரியில் இருந்து போனில் பேசியது தெரியவந்தது.
இதையடுத்து வாணியம்பாடி போலீசார் கிருஷ்ணகிரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் கிருஷ்ணகிரி போலீசார், அங்குள்ள லாட்ஜ்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். ஆனால் தினேஷ் பற்றி எந்த துப்பும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் 9ம் தேதி செல்போனை மீண்டும் தொடர்பு கொண்ட மர்ம மனிதர்கள், ஆந்திர மாநில எல்லையில் உள்ள வீரணமலை பகுதிக்கு 3 லட்சம் ரூபாய் பணத்துடன் வருமாறு கூறினார்கள். இதை அறிந்த போலீசார் தினேசின் பெற்றோரை வீரணமலைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை மாறுவேடத்தில் பின் தொடர்ந்தனர்.
போலீசார் வந்திருப்பதை அறிந்த கடத்தல் கும்பல் அங்கிருந்து தப்பி விட்டது.
இதையடுத்து கடத்தல்காரர்கள் நக்சலைட்டுகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீஸார் தேடுதலை தீவிரப்படுத்தினர்.
அதன் பின்னர் கடத்தல்காரர்களிடமிருந்து எந்த போனும் வரவில்லை. இதனால் பதட்டம் அதிகரித்தது. இந்த நிலையில், புதன்கிழமை நள்ளிரவில் அந்த கொடூரர்கள் போன் செய்து, இன்னும் ஒரு மணி நேரத்தில் பணத்துடன் வர வேண்டும். இதுதான் இறுதிக் கெடு. இனிமேல் கெடு கிடையாது என்று கூறி வைத்து விட்டனர்.
பதறித் துடித்த மணி இதை போலீஸாரிடம் தெரிவித்தார். போலீஸார் போன் எங்கிருந்து வந்தது என்பதை ஆராய்ந்தனர். அது ஆந்திர மாநிலம் ராமகுப்பம் எனத் தெரிய வந்தது.
தமிழக, ஆந்திர எல்லையில் இது உள்ளது. அங்கு நேற்று முழுவதும் போலீஸார் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், நேற்று காலை ஆம்பூரை அடுத்த மாராபட்டு வடசேரியில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே ஒரு சாக்கு மூட்டை கிடந்தது.
அதில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று சாக்கு மூட்டையை பிரித்து பார்த்த போது உள்ளே ஒரு சிறுவன் உடல் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.
அது தினேஷ் உடலாக இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து வாணியம்பாடியில் உள்ள மணி-வசந்தாவுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் ஆம்பூர் சென்று பார்த்தனர்.
பிணமாக கிடந்தது தினேஷ் என்பதை அறிந்து அவர்கள் கதறி அழுதனர். பள்ளிச் சீருடையில் கழுத்து நெரிக்கப்பட்டு தினேஷ் கொல்லப்பட்டிருந்தார்.
கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தத் தனிப்படைகளின் விசாரணையில் நான்கு பேர் சிக்கியுள்ளனர். அவர்களில் ஒருவர் பெண் ஆவார்.
ஏன் கொலை..
மணியிடம், வேலை பார்த்து வந்த ஒரு பெண் சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு தருவதாக மணி உறுதியளித்திருந்தார். ஆனால் சொன்னபடி தரவில்லை என்று தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினரும், லாரி டிரைவருமான கோவிந்தன், உறவினர் சரவணன், இன்னொரு வாலிபர் மற்றும் ஒரு பெண் என நான்கு பேர் சேர்ந்து மணியின் மகனைக் கடத்திக் கொலை செய்துள்ளனர்.
போலீஸாரை திசை திருப்புவதற்காக ஆங்காங்கே இருந்து போன் செய்து குழப்பம் விளைவித்துள்ளனர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Leave a Reply