புலிகளின் நிழல் அரசை சர்வதேசம் அங்கீகரிக்காது : விநாயகமூர்த்தி முரளிதரன்

posted in: மற்றவை | 0

karuna-100_2நாடு கடந்த நிலையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் நிழல் அரசாங்கத்தை சர்வதேச ரீதியில் எந்தவொரு நாடும் அங்கீகரிக்க மாட்டாது என்பதால் அதனை அமைப்பது என்பது முடியாத காரியம்”என தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

நேற்று மட்டக்களப்பில் நடை பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து அளித்த பதிலில் அவர் மேலும் கூறியதாவது :

“இலங்கையைப் பொறுத்த வரை விடுதலைப் புலிகள் தற்போது முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டனர். அந்த அமைப்பு பிரபாகரன் என்ற தனி மனிதனிலேயே தங்கியிருந்தது. இப்போது அவரும், அவரது தளபதிகளும் கொல்லப்பட்டு விட்டனர் .இப்படியான சூழ்நிலையில் இனி ஆயுதப் போராட்டத்திற்கு வாய்ப்பே இல்லை.

அதே நேரம், வெளிநாடுகளில் நிறைய நிதி மோசடிகள் செய்தவர்கள் விடுதலைப் புலிகள். தொடர்ந்தும் அவ்வாறான விடயங்களில் ஈடுபடுவதற்காகவும், அரசியல் ரீதியாக சில அமைப்புகளைக் கட்டியெழுப்பலாமா என்பது குறித்தும் தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

இதன் அடிப்படையில் தான் கடந்த வாரம் நாடு கடந்த நிலையில், ஒரு நிழல் அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பாக அறிவித்திருக்கின்றார்கள். இது வேடிக்கையானது. இயலாத காரியமும் கூட.

காரணம், நிழல் அரசாங்கம் என்பது சர்வதேச சட்டத்தில் ஓர் அம்சமாக இருந்தாலும், அதனை இன்னொரு நாடு அங்கீகரித்தால்தான் அது சாத்தியமாகும். அதற்கு வாய்ப்பு இல்லை.

விடுதலைப் புலிகள் பலமாக இருக்கும் போது, அதனை அங்கீகரிக்காத நாடுகள், அவர்கள் அழிந்து போயிருக்கும் இன்றைய நிலையில் அங்கீகரிக்கமாட்டாதுஆகவே புலம் பெயர்ந்துள்ள மக்கள் தற்போது உண்மை நிலையை உணர்ந்து விட்டார்கள் “என்றார்.

மற்றுமொரு கேள்விக்கு பதிலளித்த அவர்,

“கள நிலையைப் புரியாத நிலையிலேயே புலம்பெயர் நாடுகளில் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர். சில சக்திகள் அவர்களைத் தூண்டி விட்டன.

காரணம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் அவரது தளபதிகளும் முற்றுகைக்குள்ளான விடயம் சகலரும் அறிந்ததே. அவர்களைக் காப்பாற்றுவதற்காகத் தான் இப்படியான ஆர்ப்பாட்டங்களில் அவர்கள் ஈடுபட்டனர்.

சர்வதேச சக்திகளும் இதற்குத் துணை போயின. அது வெற்றியளிக்கவில்லை .எமது அரசாங்கமும் அதற்கு இடமளிக்கவில்லை.

வன்னிப் பிரதேசம் தற்போது முற்று முழுதாக அழிந்து போயுள்ளது. அந்தப் பிரதேசங்களைக் கட்டியெழுப்புவதற்கு புலம் பெயர் நாடுகளில் வாழும் மக்கள் தங்கள் அறிவையும் வளங்களையும் வன்னி மக்களுக்கு வழங்க முன் வரவேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *