பெண்கள், ஏழை மாணவர்கள், உடல் ஊனமுற்றோர் ஆகியோருக்கு பி.இ. கல்விக் கட்டணத்தை ரத்து செய்யும் நடவடிக்கையில் தமிழக அரசு முனைப்பாக ஈடுபட்டுள்ளது. இந்த மாணவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் இச்சலுகை அளிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (A.I.C.T.E.) கடந்த 2007-ம் ஆண்டு கல்விக் கட்டண ரத்து திட்டத்தை (Tuition fee waiver scheme) அறிவித்தது.
இத்திட்டத்தின்படி, பொறியியல் கல்லூரிகளில் ஒவ்வொரு பிரிவுகளில் சேரும் மாணவர்களில் பெண்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், உடல் ஊனமுற்றோர் ஆகியோரை மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுத்து, அவர்களின் கல்விக் கட்டணம் ரத்து செய்யப்பட வேண்டும்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தமிழக அரசு கடந்த 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அரசாணை வெளியிட்டது.
இருப்பினும், கல்விக் கட்டண ரத்து திட்டம் 2008-09-ம் மாணவர் சேர்க்கையில் முனைப்பாகச் செயல்படுத்தவில்லை என்றும் இந்த திட்டம் பற்றி பெரும்பாலான கல்லூரிகளில் போதிய விழிப்புணர்வு இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.
ஆகையால் 2009-10-ம் கல்வி ஆண்டில் கல்விக் கட்டண ரத்து திட்டத்தை முழு முனைப்புடன் செயல்படுத்த தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் பற்றி அனைத்து சுயநிதி பொறியியல் கல்லூரிகள், அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள் ஆகியவற்றுக்கு தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
ஒவ்வொரு பாடப் பிரிவுகளிலும் 10 சதவீதம் வரை கட்டண ரத்து சலுகை அளிக்கலாம். அதில் பெண்கள் – 2, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் – 3 , உடல் ஊனமுற்றோர்- 1 என்ற விகிதத்தைப் பின்பற்ற வேண்டும்.
கட்டண ரத்து சலுகை பெறும் அனைத்து மாணவர்களும் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதாவது பிளஸ் 2-வில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகியவற்றின் கட்ஆப் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தொழிற்பிரிவாக இருந்தால் தொழிற்பிரிவு தொடர்பான பாடம், எழுத்துத் தேர்வு, இரண்டு செய்முறைத் தேர்வுகள் ஆகியவற்றின் கட்ஆப் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
பொறியியல் கல்லூரிகளில் ஒவ்வொரு பாடப் பிரிவுகளில் சேரும் மாணவர்களின் பெற்றோர் அல்லது காப்பாளரின் ஆண்டு வருமானம் அதில் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ள மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரிக்க வேண்டும். இவர்களின் மதிப்பெண் அடிப்படையில் கட்டண ரத்து அளிக்க வேண்டும்.
ஒவ்வொரு பாடப் பிரிவுகளில் சேரும் பெண்கள், உடல் ஊனமுற்றோர் அனைவரும் கல்விக் கட்டண ரத்து சலுகை பெற தகுதியுடையவர்கள். உடல் ஊனமுற்றோர் பிரிவில் மாணவர்கள் இல்லை என்றால் அதற்குரிய சலுகையை மற்ற பிரிவினருக்கு அளிக்கலாம்.
இந்த மாணவர்களுக்கு கட்டண ரத்து சலுகை அளிக்கும் கல்லூரிகள், சலுகை அளிக்கப்படும் பாடப் பிரிவுகளில், அந்த பாடப் பிரிவின் அனுமதிக்கப்பட்ட மொத்த இடங்களில் 10 சதவிகிதம் இடங்களை கூடுதலாக ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Leave a Reply