போரில்தான் கொல்லப்பட்டார் பிரபாகரன்: சித்ரவதை புகாருக்கு இலங்கை அரசு மறுப்பு

posted in: மற்றவை | 0

தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை இலங்கை ராணுவம் உயிருடன் பிடித்து சித்ரவதை செய்ததாகவும், அதற்கு பின்னரே அவர் கொல்லப்பட்டதாகவும் வெளியான தகவலுக்கு இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

இலங்கை, யாழ்ப்பாணத்தை சேர்ந்த மனித உரிமை அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட சிறப்பு அறிக்கையில்,

‘ராணுவம் நடத்திய தாக்குதலில் விடுதலைப் புலி தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாகவும், அவரது உடலை நந்திகடல் நீர் ஏரி பகுதியில் கண்டுபிடித்ததாகவும் இலங்கை அரசு தெரிவித்தது. ஆனால், உண்மையில் இலங்கை ராணுவம் பிரபாகரனை உயிருடன் பிடித்ததாக தெரியவந்துள்ளது. இதற்கு பின் அவரை அங்கு உள்ள ராணுவ முகாமுக்கு கொண்டு சென்று சித்ரவதை செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. இதற்கு பின்னர் தான் அவர் கொல்லப்பட்டுள்ளார். ஆளும் கட்சியை சேர்ந்த தமிழ் அரசியல்வாதியின் முன்னிலையில் பிரபாகரன் சித்ரவதை செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. மேலும், பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனையும் ராணுவம் கொலை செய்துள்ளது. ராணுவ வட்டாரங்கள் மூலமாக இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன’ என்று கூறப்பட்டிருந்தது

ஆனால், இதை இலங்கை அரசு மறுத்துள்ளது.

இது குறித்து கருத்து கூறிய ராணுவ செயலர் கோத்தபயா ராஜபக்சே,

மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ள தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. பிரபாகரனோ, விடுதலைப் புலிகள் அமைப்பின் மற்ற முக்கிய தலைவர்களோ உயிருடன் பிடிபடவில்லை”என்றார்.

இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறுகையில்,

”பிரபாகரன் உயிருடன் பிடிபட்டதாக கூறப்படுவது தவறான தகவல். ராணுவம் இறுதிக் கட்ட தாக்குதல் நடத்தியபோது பிரபாகரனுடன் சேர்ந்து 12க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இந்த சண்டையில் தான் பிரபாகரன் கொல்லப்பட்டார்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *