பைக், கார்களுக்கு ஆகஸ்ட் முதல் கூடுதல் வரி: அமைச்சர் நேரு தகவல்

posted in: மற்றவை | 0

விபத்து நிவாரண உதவியை அதிகரிக்க, இனி வாகனப் பதிவின் போது இரு சக்கர வாகனங்களுக்கு 250 ரூபாய், இலகு ரக வாகனங்களுக்கு 1,500 ரூபாய், இதர வாகனங்களுக்கு 2,000 ரூபாய் கூடுதலாக வரி விதிக்கப்படும். இந்த வரி விதிப்பு ஆகஸ்ட் 1ம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. தமிழகம் முழுவதும் விரைவில் 3,500 மினி பஸ்களும் ஓடப்போகின்றன. சட்டசபையில் போக்குவரத்துத் துறைக்கான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்துக்கு, அமைச்சர் நேரு பதிலளித்த போது இந்த தகவலைத் தெரிவித்தார்.

அமைச்சர் நேரு கூறியதாவது:

”மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தான் வாகன எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதிலும், இரு சக்கர வாகன எண்ணிக்கையில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. முந்தைய ஆட்சியில் வருவாய் 1,130 கோடி ரூபாயாக இருந்தது. இந்த ஆண்டு 1,718 கோடியே 81 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. தற்போது, 28 அலுவலகங்களில் கணினி முறையில் பழகுனர் உரிமங்கள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு அனைத்து அலுவலகங்களிலும் கணினி முறையில் வழங்கப்படும். மத்திய அரசு ஆலோசனைப்படி, மூன்று அலுவலகங்களில், ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்குவது அறிமுகப்படுத்தப்பட்டது. லைசென்ஸ் மற்றும் ஆர்.சி., புத்தகங்களை ‘ஸ்மார்ட் கார்டாக’ வழங்கும் இம்முறைப்படி இதுவரை 50 ஆயிரம் பேர் பெற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள அலுவலகங்களில் ஸ்மார்ட் கார்டு வழங்கும் முறை இந்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்.

மினி பஸ்கள் 7,500 இயக்க கடந்த தி.மு.க., ஆட்சியில் அனுமதிக்கப்பட்டது. இதில் 4,041 மினி பஸ்கள் இயக்கப்பட்டன. சிலர் கோர்ட் சென்று ஆயிரம் மினி பஸ்கள் வரை இயக்க அனுமதி பெற்றறுள்ளனர். சிலர் அரசு நிர்ணயித்த கி.மீ., கணக்கை எதிர்த்து கோர்ட் சென்றனர். இதனால், மீதமுள்ள மினி பஸ்களுக்கு அனுமதி அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. பழைய சட்ட திட்டப்படி அனுமதி வழங்குவதாக உறுதியளித்து, இவ்வழக்கு தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது.

பழைய சட்டப்படி, 232 இடங்களில் மட்டுமே மினி பஸ்களை இயக்க முடியும். இதனால், புதிய சமரச திட்டத்தை வகுத்து, புதிதாக 3,500 மினி பஸ்களை இயக்க அனுமதிக்கப்படும்; வழக்குகள் மூலம் அனுமதி பெற்றவர்களுக்கும் உரிமம் வழங்கப்படும். விபத்துகளில் சிக்குவோருக்கு தற்போது நிவாரண நிதியாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. சாலைப் பாதுகாப்புக்கும், சாலை விபத்துகளில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தொடர்ந்து நிவாரண வசதி செய்து கொடுக்கவும், புதிதாக வாகனங்களைப் பதிவு செய்வோரிடம் இருந்து சாலைப் பாதுகாப்பு வரி என்பதில், புதிய தொகையை வசூலிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி, இரு சக்கர வாகனங்களுக்கு 250 ரூபாயும், இலகு ரக வாகனங்களுக்கு 1,500 ரூபாயும், இரண்டிலும் குறிப்பிடப்படாத மீதமுள்ள வாகனங்களுக்கு 2,000 ரூபாயும் கூடுதலாக வரி விதிக்கப்படும். தமிழக வாகன வரி விதிப்பு சட்டத்தில் இதற்கான பிரிவுகள் கொண்டு வரப்பட்டு, வரும் ஆகஸ்ட் 1ம் தேதியிலிருந்து பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு இந்த வரி விதிப்பு அமலுக்கு வரும். சென்னையில் மேலும் 7,500 ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்கப்படும். மொபைல் போனில் பேசியபடி வாகனம் ஓட்ட மத்திய அரசு தடை விதித்துள்ளது. அவ்வாறு ஓட்டுவோரின் டிரைவிங் லைசென்ஸ் தடை செய்ய சட்டத்தில் வழி வகை உள்ளது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *