தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதினி விமானம் மூலம் வெளிநாடு செல்ல உதவிய பாஸ்போர்ட் திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் வசந்தி, க/பெ.மாரிமுத்து, ஜெகதாப்பட்டினம், ஆவுடையார் கோவில் தாலுகா, புதுக்கோட்டை மாவட்டம் என்ற பெயர் மற்றும் முகவரியில் எடுக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ‘ரா’ அமைப்பு அதிகாரிகள் திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் நேரில் வந்து விசாரணை நடத்தினார்கள். மதிவதனிக்கு வழங்கப்பட்ட பாஸ்போர்ட் தொடர்பான ஆவணங்களை எடுத்துக்கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பான விசாரணைக்காக கடந்த வாரம் திருச்சி பாஸ்போர்ட் அலுவலர் பாலசந்திரன் டெல்லி சென்று வந்தார்.
இதுபற்றி பாலச்சந்திரனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
”திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மூலம் தினமும் 500 பாஸ் போர்ட்டுகள் வழங்கப்படுகின்றன. பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பம் செய்பவர்கள் 15 ஆவணங்கள் உண்மையாக உள்ளவையா என்பதை சரிபார்த்த பிறகு பாஸ்போர்ட் வழங்கப்படும்.
அதே போன்று சம்பந்தப்பட்ட நபர் நேரில் வந்தால்தான் பாஸ்போர்ட் வழங்கப்படும். மதிவதினிக்கு பாஸ்போர்ட் வசந்தி என்ற பெயரில் வழங்கப்பட்டது என்று கூறப்படுவது உண்மையில்லை. நான் டெல்லி சென்றது எனது பதவி உயர்வு கொச்சின் அலுவலக பொறுப்பு ஏற்பது தொடர்பாகத்தான். எதற்காக இந்த புரளியை பரபரப்புகிறார்கள் என்பது தெரியவில்லை”
இவ்வாறு அவர் கூறினார்.
அதேபோன்று கியூபிரிவு போலீசாரும் இதை புரளி என்று கூறினர். இது தொடர்பாக பாஸ்போர்ட் அலுவலகத்தில் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை என்று கூறினர்.
மதிவதனிக்காக வசந்தி என்ற பெயரில் போலி பாஸ் போர்ட்டை தயாரித்து கொடுத்தது திருச்சியை சேர்ந்த ஒரு புரோக்கர் என்று தெரிய வந்துள்ளது. அவர் தான் திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு சென்று விண்ணப்பத்தை கொடுத்துள்ளார்.
அதன் பேரில் ஓ.எஸ்.ஆர். முறையில் சோதனை நடந்துள்ளது. அதில் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி அக்செப்டட் என்று முத்திரை குத்தி கையெழுத்து போட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த போலி பாஸ்போர்ட் உதவியால் மதிவதனி தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. தற்போது அந்த புரோக்கர் தீவிரமாகத் தேடப்பட்டு வருகிறார்.
Leave a Reply