மதுரையில் 15 டிபன் பாக்ஸ் குண்டுகள் சிக்கின – தீவிரவாத செயலுக்கு சதி?

posted in: மற்றவை | 0

16-tiffin-box-bombs200மதுரை: மதுரை ரிங் ரோடு அருகே உள்ள கானாத்தான் பாலத்துக்குக் கீழே மர்மமான முறையில் வைக்கப்பட்டிருந்த 15 டிபன் பாக்ஸ் குண்டுகளை போலீஸார் மீட்டுள்ளனர். தீவிரவாத செயலுக்கு திட்டமிடப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் போலீஸாருக்கு வந்துள்ளது.

தென் மாநிலங்களில் தீவிரவாதத் தாக்குதல் நடக்கலாம் என உளவுப் பிரிவு எச்சரித்துள்ளதால், தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பின் கீழ் உள்ளது.

குறிப்பாக சென்னை, மதுரை, நெல்லை, கோவை உள்ளிட்ட தீவிரவாத தாக்குதலுக்கான வாய்ப்பு உள்ள நகரங்களில் அதி தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மதுரை நகரமும் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் கோவில் ஏற்கனவே உச்சகட்ட பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மதுரையில் உள்ள ஒரு பாலத்துக்குக் கீழ் சந்தேகத்திற்கு இடமான முறையில் வைக்கப்பட்டிருந்த 15 டிபன் பாக்ஸ்கள் சிக்கியுள்ளன. இவற்றில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தன.

மதுரை விரகனூர் ரிங்ரோடு அருகே உள்ள மண் அள்ளும் எந்திரங்களை பழுது பார்க்கும் ஒர்க்ஷாப் உள்ளது. இதில் மகேஷ் என்பவர் வேலை பார்க்கிறார்.

நேற்று மாலை 6.30 மணிக்கு அவர் ரிங்ரோடு அருகே உள்ள கானத்தான் பாலத்தின் கீழ் பகுதிக்கு சென்றார். அங்கு ஒரு பையில் 15-க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான டிபன் பாக்ஸ்கள் இருந்தன.

அதில் ஒன்றை எடுத்த மகேஷ் திறந்து பார்க்க முயன்றார். ஆனால் முடியவில்லை. எனவே தண்ணீருக்குள் வீசினார். மற்றொன்றை எடுத்து பாறை மீது வீசினார். அது “டமார்” என பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் மகேசுக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

இதனால் குழப்பமடைந்த மகேஷ், அதில் குண்டு இருக்கலாம் என நினஐத்து, கருப்பாயூரணி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

எஸ்.பி. பாலகிருஷ்ணனுக்குத் தகவல் போனது. அவர் தலைமையில் போலீஸார் விரைந்து வந்தனர்.
வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாரும் வந்தனர்.

மர்மமாக காணப்பட்ட டிபன் பாக்ஸ்களில் வெடிகுண்டுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. உள்ள இருக்கும் குண்டுகள் சக்தி வாய்ந்தவை என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. டிபான் பாக்ஸ்களை சுற்றிலும் டயர்களைக் குவித்தனர். போலீஸாரும் பெருமளவில் வரவழைக்கப்பட்டனர்.

இந்த இடத்தை இன்று காலை தென் மண்டல ஐஜி சஞ்சீவ் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

குண்டுகள் வெடிக்கச் செய்யப்பட்டன…

சிக்கிய குண்டுகளை வெடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் டிபன் பாக்ஸைத் திறந்தாலோ அல்லது குண்டைத் தொட்டாலோ அது வெடிக்கும் வகையில் இருந்தது.

இதையடுத்து டெட்டனேட்டர்களைப் பயன்படுத்தி அவற்றை வெடிக்கச் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி ஒவ்வொரு டிபன் பாக்ஸாக டெட்டனேட்டரைப் பயன்படுத்தி வெடிக்க வைத்தனர். பயங்கர சப்தத்துடன் அவை வெடித்துச் சிதறின.

டிபன் பாக்ஸ் குண்டு வெடித்தபோது பெரும் புகை மண்டலமும் எழுந்தது.

இந்த சம்பவம் மதுரையில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாதிகள் மிகப் பெரிய சதிக்குத் திட்டமிட்டிருந்தனரா அல்லது சமூக விரோதிகள் இந்த குண்டை தயார் செய்து வைத்திருந்தனரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

அலுமினிய பவுடர், பிளேடு, கண்ணாடித் தூள், பால்ரஸ் குண்டுகள், கூழாங்கற்கள் உள்ளிட்டவற்றால் இந்த குண்டுகள் தயாரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு குண்டும் ஒரு கிலோ எடை கொண்டதாகும்.

தீவிரவாதிகள் பாணியில்..

முன்பு ஹைதராபாத், பெங்களூர், மும்பை உள்ளிட்ட இடங்களில் இதேபோன்ற டிபன் பாக்ஸ் குண்டுகள் வெடித்துள்ளன. அவற்றை வைத்தது தீவிரவாதிகள்.

எனவே மதுரைக்குள் தீவிரவாதிகள் ஊடுறுவியுள்ளனரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

டிபன் பாக்ஸ் குண்டுகள் அதிக அளவில் சிக்கியதன் மூலம் பெரும் சதித் திட்டத்துடன் ஏதேனும் கும்பல் மதுரைக்குள் ஊடுறுவியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவம் குறித்து ஐஜி சஞ்சீவ் குமார் கூறுகையில்,

இது மாதிரியான குண்டுகள் மதுரையில் சிக்கி இருப்பது இதுதான் முதல் முறையாகும். இது 200 மில்லி கொள்ளளவு கொண்ட சிறிய அளவு பாக்ஸ் ஆகும்.

இதில் அலுமினிய பவுடர், நொறுங்கிய பிளேடு, பீங்கான், வெடிமருந்து பொருட்களுடன் ஒட்டி உள்ளனர்.

இந்த வகை குண்டுகள் 20 மீட்டர் தூரம் சுற்றளவுக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடிய சக்தி வாய்ந்தவை. இதனை தீவிரவாதிகள் வீசி சென்றார்களா? அல்லது உள்ளூர் ரவுடிகள் யாரும் வீசி சென்றார்களா? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

விரைவில் குற்றவாளிகளைப் பிடிக்க முயன்று வருகிறோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *