மனித உயிர்ச்சிலைகள்: லண்டன் சிற்பியின் கனவு பலிக்கிறது

posted in: உலகம் | 0

fourth-plinthலண்டனைச் சேர்ந்த சிற்பி ஆண்டனி கார்சம்லெ. அழகான சிற்ப வேலைப்பாடுகள் பலவற்றை செய்த இவருக்கு வித்தியாசமான யோசனை ஒன்று உதித்தது.

உயிருள்ள மனிதச் சிலைகளை ஏன் உருவாக்கக்கூடாது என்பதுதான் அந்த யோசனை. யோசனை உதித்த உடன் லண்டன் டிராஃபல்கர் சதுக்கத்தில் உள்ள நான்காவது பீடத்தை தன்னுடையக் களமாக அறிவித்தார்.

இந்த டிராஃபல்கர் சதுக்கம் என்பது இங்கிலாந்து மகாராணி வம்சத்தைச் சேர்ந்தவர்களின் சிலைகள் மட்டுமே வைக்கப்படும் இடமாகும். மேலும் நான்காவது பீடத்தில் சிலையாகப் போவது யார் என்பதும் இப்போதைக்கு தெரியாது. அது வெறும் பீடம் மட்டுமே.

சிற்பி ஆண்டனி யோசனைப்படி அந்தப் பீடத்தின் மீது யார் வேண்டுமானாலும் வந்து ஒரு மணி நேரத்திற்கு, எந்தவிதமாக வேண்டுமானாலும் சிலையாக நின்றுவிட்டுப் போகலாம்.

உலகப் பிரச்னைகள் எதுவானாலும், அதை விளக்கும் வண்ணம் தன்னுடைய விருப்பப்படி காட்சியாக நிற்கலாம்.

ஜூலை 6ஆம் தேதி தொடங்கும் இந்த மனித உயிர்ச்சிலை நிகழ்வு தொடர்ந்து 24 மணிநேரமும் நிகழ்ந்துகொண்டிருக்கும். ஒரு மணி நேரத்திற்கு 100 பேர் வீதம் சிலையாக நிற்கப் போகிறார்கள். ஆக, நாளொன்றுக்கு 2400 பேரும், 100 நாட்களில் 2 லட்சத்து 40 ஆயிரம் பேரும் நிற்கப் போகிறார்கள் (அக்டோபர் 14 வரை).

இந்த மனித உயிர்ச்சிலை நிகழ்வில் இங்கிலாந்தைச் சேர்ந்த, 16 வயதுக்கு மேலானவர்கள் யார் வேண்டுமானாலும் கலந்துகொண்டு சிலையாக நின்றுவிட்டு போகலாம் என்று பரபரப்பாக செய்தியைக் கசிய விட்டார். இந்த மனித உயிர்ச்சிலை யோசனைக்கு அவர் One & Other என்று மிகப் பொருத்தமாக பெயர் வைத்தார்.

நான், நீ என்று குவிந்துவிட்டனர் மக்கள். இப்போது கம்ப்யூட்டர் தேர்ந்தெடுக்கும் நபர்தான் அந்த ஒரு மணி நேர சிலையாக நிற்க முடியும். இன்னும்கூட மக்கள் ஆயிரக்கணக்கில் விண்ணப்பம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

மனித உயிர்ச்சிலையாக நிற்கப் போகும் முதல் 100 நபர்களில் முதல் நபராக கடல் ஆராய்ச்சியாளரான 26 வயது ஆலிவர் பார்சன்ஸ் பாக்கர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவருக்குக் கிடைத்திருக்கும் ஒரு மணி நேர வாய்ப்பில் சுத்தமான நீரின் தேவை குறித்து மக்களுக்கும் அரசுக்கும் உணர்த்தும் வகையில் சிலையாக நிற்கப்போகிறாராம். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் சிலர், தங்கள் பிறந்தநாளை பீடத்தின்மீது கொண்டாடப்போகிறோம் என்று கூறியிருக்கிறார்கள்.

சிற்பியின் கற்பனைக்குக் கிடைத்த மக்களின் ஆதரவால் இங்கிலாந்து காவல்துறைதான் கலங்கிகிடக்கிறது. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏதாவது தலைதூக்குமோ என்ற அச்சத்தில், மிகவும் எச்சரிக்கையுடன் இந்த விஷயத்தை கையாண்டு வருகிறார்கள்.

மேலும் சிற்பி தேர்ந்தெடுத்த நான்காவது பீடமானது ராணி குடும்பத்தினரோடு தொடர்புடையது என்பதால், சிற்பி எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

மனித உரிமை மற்றும் மனித சுதந்திரத்தைப் போற்றும் வகையில் இந்த சிலை மேட்டரை கையில் எடுத்திருப்பதாக சிற்பி ஆண்டனி கார்சம்லெ கூறுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *