தடை செய்யப்பட்ட சிபிஐ மாவோயிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான கணபதி என்கிற கோடீஸ்வரராவ் வங்கதேசத்திற்கு தப்பி ஓடி விட்டதாகக் கூறப்படுகிறது.
மேற்கு வங்க மாநிலம் லால்கர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 50 கிராமங்களை மாவோயிஸ்டுகள் பிடித்து வைத்திருந்தபோது, அங்கிருந்தபடி அட்டகாசம் செய்த வந்த நக்சலைட்டுகளுக்குத் தலைமை தாங்கி வழி நடத்திச் சென்றவர்தான் ராவ்.
தற்போது மாவோயிஸ்ட்டுகளுக்குத் தடை விதித்து அவர்களை தீவிரவாதிகள் என மத்திய அரசு அறிவித்துள்ளதைத் தொடர்ந்து கோடீஸ்வரராவ் வங்கதேசத்திற்கு தப்பி விட்டதாகப் பொலிஸ் தரப்பில் நம்பப்படுகிறது.
இதுகுறித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
“கடந்த 2 நாட்களாக ராவ் குறித்து எந்தத் தகவலும் இல்லை. லால்கர் பகுதியில் அவர் இருப்பதாகவும் தெரியவில்லை. அவர் நாட்டை விட்டு தப்பியிருக்க வாய்ப்புக்கள் உள்ளன.
அவர் இந்தியாவில் இல்லை என்பதற்கு சில உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன. அவர் வங்கதேசம் போயிருக்கலாம். இருப்பினும் அதுகுறித்து உறுதி செய்ய முடியவில்லை” என்றார்.
ஆனால் ராவ் எங்கிருக்கிறார் என்பது தங்களுக்குத் தெரியும் என மேற்கு வங்க மாநில டிஜிபி சுஜீத் குமார் சர்க்கார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
“ராவ் எங்கிருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும், ஆனால் அதுகுறித்து சொல்வதற்கு ஏதும் இல்லை. அவரைப் பிடிக்கும் முயற்சியைத் தற்போது முடுக்கி விட்டுள்ளோம்” என்றார்.
இதற்கிடையே, மாவோயிஸ்டுகள் அறிவித்த பந்த்தின் 2ஆவது நாளான நேற்று மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் பல இடங்களில் நக்சலைட்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நீதிமன்றில் குண்டு வீச்சு
பீகார் மாநிலம் லக்கசராய் என்ற இடத்தில் உள்ள சிவில் நீதிமன்றுக்கு நேற்று 50க்கும் மேற்பட்ட நக்சலைட்கள் பொலிஸ் சீருடையில் வந்தனர். கைகளில் வைத்திருந்த ஏகே47 துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டபடி உள்ளே வந்தனர்.
நீதிமன்ற வளாகத்தில் உள்ள லாக் அப்புக்குச் சென்ற அவர்கள் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த நக்சலைட் பாபுலால் பேஸ்ரா என்பவரை மீட்டுச் சென்றனர். இதைத் தடுக்க முயன்ற பொலிஸாரை அவர்கள் சுட்டு நிறுத்தினர்.
இந்தச் சம்பவத்தில், மாவட்ட துணை வளர்ச்சி ஆணையர் ராஜீவ் ரஞ்சனும், பொலிஸார் இருவரும் காயமடைந்தனர்.
நாட்டு வெடிகுண்டுகளையும் அவர்கள் வெடிக்கச் செய்ததால் நீதிமன்ற வளாகம் சேதமடைந்தது.
மீட்டுச் செல்லப்பட்டவர் பேஸ்ரா ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். ஏராளமா வழக்குகள் இவர் மீது உள்ளன.
பின்னர் அருகே உள்ள கலெக்டர் அலுவலகத்திற்குள் புகுந்த மாவோயிஸ்டுகள் அங்கும் தாக்குதல் நடத்தினர். கலெக்டரைச் சுட்டு வீழ்த்தவே அவர்கள் அங்கு வந்திருந்ததாகக் கூறப்படுகின்றது. ஆனால் கலெக்டர் அங்கு இருக்கவில்லை.
கயா மாவட்டத்தில் கராசி என்ற கிராமத்தில் உள்ள ஒரு தனியார் செல்போன் கோபுரத்தைத் தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்தனர். அந்த செல்போன் கோபுரம், முற்றிலுமாக சேதமடைந்தது.
அவுரங்காபாத் மாவட்டம் ஜிகாதியா என்ற கிராமத்தில் உள்ள ஒரு சமுதாய மையத்திலும் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.
பாலங்கள்மீது தாக்குதல்
மேற்கு வங்காளத்தில் இரண்டு இடங்களில் பாலங்களைத் தகர்க்க கண்ணி வெடித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
ஜார்கிராம் நகரம் அருகே உள்ள பந்த்கோரா என்ற இடத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. புருலியா மாவட்டத்திலும் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்துக்குத் தீ வைக்கப்பட்டது.
ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டம் சஹாபூரில் உள்ள பஞ்சாயத்து பவன் அலுவலகமும் தாக்கித் தகர்க்கப்பட்டது. குண்டு வைத்துத் தகர்த்ததில் கட்டடம் சேதமடைந்தது.
நக்சலைட்டுகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பீகார், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், ஒரிசா, சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில், நக்சலைட்கள் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.
Leave a Reply