மின்சார கட்டணத்தை உயர்த்தக்கூடாது என விருத்தசாலம் சட்டசபை உறுப்பினரான நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
சட்டசபையில் எரிசக்தி துறை மானிய கோரிக்கை விவாதத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் இன்று மின்சாரம் எப்போது வரும், போகும் என்று சொல்ல முடியவில்லை. மின்சாரம் இல்லாமல் மக்கள் பெரிய பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். தங்கு தடையின்றி வோல்டேஜ் குறையாமல் மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.
என்னுடைய விருத்தாசலம் தொகுதியில் கோ.பூவனூரில் உள்ள துணை மின் நிலையம் எரிந்து 10 நாட்கள் ஆகியும் இன்னும் சரி செய்யப்படவில்லை.
அதனால் அந்த பகுதியில் உள்ள 22 கிராமங்கள் மின்சாரம் இல்லாமல் உள்ளன.
அங்குள்ள மக்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லை. மாணவ-மாணவிகள் படிக்க முடியவில்லை. விவசாயம் பார்க்க முடியவில்லை.
கடந்த 1-4-2008 அன்று சட்டசபையில் நான் பேசிய போது விருத்தாசலம் பகுதியில் உள்ள மின்சார கம்பிகளையும், துணை மின் நிலையங்களையும் புதுப்பிக்க கூறினேன்.
இதே பூவனூர் துணை மின்நிலைய டிரான்ஸ் பார்மர்களின் திறன் அளவை உயர்த்த வேண்டும் என்றேன். 9-4-2008 அன்று மின்துறை அமைச்சருக்கும் இதை தெளிவாக பட்டியலிட்டு கடிதமும் அனுப்பினேன்.
இதற்கு செப்டம்பர் மாதம் கடலூர் கண்காணிப்பு என்ஜினீயர் எனக்கு பதில் அனுப்பினார். டிரான்ஸ் பார்மர்கள் திறனை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் இன்று வரை எந்த நடவடிக்கையும் இல்லை.
மின் வாரியம் தானாகவே குறைகளை சரி செய்ய வேண்டும். எங்களை போன்ற எம்.எல்.ஏ.க்கள் கூறியும் எந்த நடவடிக்கை எடுக்காதது தான் இந்த அரசின் நிர்வாகமா?
இது சம்பந்தமான ஆவணங்களை சபாநாயகர் மூலம் மின்துறை அமைச்சருக்கு கொடுக்கிறேன்.
இதே போன்ற குறைபாடு என் தொகுதியில் மட்டும் அல்ல தமிழ்நாடு முழுவதுமே மக்கள் மின்தடை காரணமாக அவதிப்படுகின்றனர்.
இலவச கலர் டி.வி.க்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது. விவசாய பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்கப்படுகிறது. ஆனால் மின் வெட்டு காரணமாக இந்த இலவசங்களால் எந்த பயனும் இல்லை. மின்சார தேவை முயல் வேகத்தில் ஏறுகிறது. ஆனால் உற்பத்தி திட்டங்கள் ஆமை வேகத்தில் நடக்கிறது.
வரும் மார்ச் மாதம் வரை மின்சார தேவை 10 ஆயிரத்து 400 மெகாவாட். ஆனால் உற்பத்தி 6 ஆயிரத்து 300 மெகாவாட் அளவுதான் இருக்கும் என்கிறார்கள்.
இந்த பற்றாக்குறையை அரசு எப்படி சரி செய்ய போகிறது?
2012-ம் ஆண்டு வரை மின் பற்றாக்குறை தீராது என்று சொல்கிறார்கள். இது உண்மையா? நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டிற்கு தர வேண்டும். இல்லை என்றால் மத்திய அரசு நெய்வேலி அனல்மின் உற்பத்தி நிலையங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இதை தமிழக அரசு வற்புறுத்த வேண்டும்.
தமிழ்நாடு மின்சார வாரியம் இந்த ஆண்டு ரூ. 6500 கோடி நஷ்டத்தில் உள்ளதாக கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதை காரணம் காட்டி தேர்தல் முடிந்து விட்ட காரணத்தால் மின்சார கட்டணத்தை உயர்த்தக்கூடாது.
தென்னக மாநிலங்களில் ஆண்டு தோறும் ஏற்படும் மின்சார பற்றாக்குறையை அடிப்படையாக வைத்து அந்த விகிதாசாரத்தில் மின்சாரத்தை மத்திய அரசு பிரித்து வழங்க வேண்டும். அப்போதுதான் மின் பற்றாக்குறையை மாநில அரசுகள் சமாளிக்க முடியும். இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.
Leave a Reply