மும்பை, மண்டியா மாவட்டம் கே.எம்.தொட்டி அருகே உள்ள தொட்டேகவுடன கொப்பலு கிராமத்தைச் சேர்ந்தவர் சிக்கண்ணா (வயது40). விவசாயி. இவரை கொன்று புதைத்த இவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
சிக்கண்ணாவின் மனைவி மஞ்சுளா. இருவரும் 6 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். 4 வயதில் ஒரு மகன் உள்ளான். சிக்கண்ணாவுக்கு குடிப்பழக்கம் உண்டு.
தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் மனைவியுடன் தகராறு செய்து அடித்து உதைத்தார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு இருந்து வந்தது. கணவன் செய்யும் கொடுமையை தனது பெற்றோரிடம் சொல்லி மஞ்சுளா அழுவது உண்டு.
இந்த நிலையில் சிக்கண்ணாவை கடந்த ஒரு வாரமாக காணவில்லை. இது குறித்து மஞ்சுளாவிடம் அக்கம் பக்கம் இருந்தவர்கள் விசாரித்த போது, அவர் எங்கு சென்றார்? என்பது எனக்கு தெரியவில்லை என்று மஞ்சுளா கூறி வந்தார்.
இதுபற்றி சிக்கண்ணாவின் குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. சிக்கண்ணாவின் அண்ணன் ராஜண்ணா விரைந்து வந்து மஞ்சுளாவிடம் விசாரித்தார். அவரிடமும் கணவன் எங்கு சென்றார் என்பது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று மஞ்சுளா தெரிவித்து விட்டார். ஆனால் மஞ்சுளாவின் பதில் ராஜண்ணாவுக்கு திருப்தி அளிக்கவில்லை.
இதை தொடர்ந்து கிருகாவலு போலீஸ் நிலையத்தில் மஞ்சுளா மீது ராஜண்ணா புகார் செய்தார். அதன் பேரில் மஞ்சுளாவிடம் போலீசார் தீவிர விசாரனை நடத்தினார்கள்.
முதலில் போலீசாரின் கேள்விகளுக்கு எனக்கு எதுவும் தெரியாது என்று மஞ்சுளா கூறிக்கொண்டு இருந்தார். ஆனால் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்திய போது தனது குடும்பத்தினருடன் சேர்ந்து சிக்கண்ணாவை மஞ்சுளா கொலை செய்த திடுக்கிடும் தகவல் வெளியானது.
குடித்துவிட்டு தகராறு செய்து வந்த சிக்கண்ணாவை மஞ்சுளா கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அரிவாளால் வெட்டி கொலை செய்தார். பின்னர் கயிற்றால் கட்டி எடுத்துச்சென்று தனது நிலத்தில் புதைத்து விட்டு வந்து விட்டார். இந்த கொலைக்கு அவருடைய தாயார் நிங்கம்மா, தந்தை நிங்கேகவுடா, தம்பி லோகேஷ் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.
இதை தொடர்ந்து புதைக்கப்பட்ட பிணத்தை தோண்டி எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலை தாசில்தார் சுமா முன்னிலையிலும், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலும் சிக்கண்ணாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. சிக்கண்ணாவின் உடலுடன் கொலை செய்ய பயன்படுத்திய அரிவாள், கயிறு ஆகியவையும் மீட்கப்பட்டன.
இந்த கொலை தொடர்பாக மஞ்சுளா, நிங்கம்மா, நிங்கேகவுடா, லோகேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Leave a Reply