டெல்லி: தேசிய அளவில் உயர் கல்வியை சீர்திருத்தம் செய்ய உருவாக்கப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி. ஒரு வெட்டியான குழுவாகிவிட்டதால் அதை கலைத்துவிடுமாறு மத்திய அரசுக்கு யஷ்பால் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.
அதே போல பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி தருவது, அவற்றின் தரத்தைக் கண்காணிப்பது ஆகிய பணிகளுக்காக உருவாக்கப்பட்ட அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி்க் கவுன்சிலும் (ஏஐசிடிஇ) உருப்படியாக தனது வேலையை செய்யாததால் அதையும் கலைத்துவிமாறு யஷ்பால் குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்தப் பரிந்துரைகளை ஏற்பதாகவும், யுஜிசி மற்றும் ஏஐசிடிஇயை 100 நாட்களில் கலைக்கப் போவதாகவும் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.
நாட்டின் உயர் கல்வியை சீரமைக்க மிகச் சிறந்த கல்வியாளரான யஷ் பால் தலைமையில் கடந்த மன்மோகன் சிங் ஆட்சியி்ல் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவி்ல் தமிழகத்தைச் சேர்ந்த அனந்த கிருஷ்ணன் உள்பட நாட்டின் மிகச் சிறந்த 24 கல்வியாளர்கள் இடம் பெற்றனர்.
இந்தக் குழு தீவிர ஆய்வுகள் நடத்தி தனது அறிக்கையைத் தயாரித்துள்ளது. இந்த அறி்க்கையை நேற்று கபில் சிபலிடம் யஷ் பால் அளித்தார்.
அதில் யுஜிசி, ஏஐசிடிஇ ஆகியவற்றைக் கலைத்துவிட்டு அவற்றுக்குப் பதிலாக தேசிய உயர் கல்வி ஆராய்சி கமிஷனை உருவாக்க வேண்டும். இந்த அமைப்புகள் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளை கட்டுப்படுத்த வேணடிய அவசியமில்லை. பல்கலைக்கழகங்கள் தான் கல்லூரிகளையும் தங்களையும் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் இந்த அமைப்புகளே தேவையில்லை.
அதே நேரத்தில் தேசிய அளவில் கல்வி நிலையங்களை கண்காணிக்க உயர் கல்வி ஆராய்சி கமிஷனை உருவாக்க வேண்டும். இந்த அமைப்பு தேர்தல் ஆணையம் போல சுதந்திரமான அமைப்பாக செயல்பட வேண்டும். இதில் அரசோ, அரசியல் தலையீடோ இருக்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்காக சட்டத்தில் திருத்தம் செய்துவிட்டு இந்த அமைப்பை உருவாக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இது குறித்து அமைச்சர் கபில் சிபல் கூறுகையில், யஷ் பால் குழுவின் பரிந்துரைகள் மிகச் சிறப்பாக உள்ளன. நாட்டின் கல்வித் தரத்தை உயர்த்த இந்தப் பரிந்துரைகள் மிகவும் உதவும். இந்தப் பரிந்துரைகளை 100 நாட்களுக்குள் அமலாக்குவோம்.
குழந்தைகளின் கல்வி உரிமையை செயல்படுத்துவதில் ஒரு நாளைக் கூட வீணாக்க முடியாது. கல்வி முழுமையானதாகவும், தரமானதாகவும் இருக்க வேண்டும்.
10ம் வகுப்பு பொதுத் தேர்வு தேவையா?
அதே போல பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள், சிபிஎஸ்சி தேர்வுகள் அவசியமா என்ற கேள்வியும் எழுகிறது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு பின்னர் தான் மாணவ, மாணவியர் ஒரு சிறப்பு பாடப்பிரிவை தேர்வு செய்ய வேண்டியுள்ளது. இதனால் 10ம் வகுப்பிலேயே பொதுத் தேர்வு நடத்தி, மாணவர்கள் பெறும் மதிப்பெண் சதவீதம் அடிப்படையில் அவர்கள் சிறப்புப் பாடப்பிரிவை தேர்வு செய்வதற்கு பதிலாக வேறு முறையை பின்பற்றலாம்.
கல்வி முறை என்பது அறிவை வளர்ப்பதாகவும், ஆர்வத்தை தூண்டுவதாகவும் அமைய வேண்டும் என்பதால் இதைச் சொல்கிறேன்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்வதால் மாணவ, மாணவியர் மன நெருக்கடிக்கு ஆளாவது தவிர்க்கப்படும். படிப்பை ஆர்வத்துடனும், விருப்பத்துடன் தொடர அது வழி வகுக்கும்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை கைவிடுவது குறித்து பள்ளிகளுடனும், பெற்றோர்களுடனும் தீவிர ஆலோசனை நடத்திய பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார் கபில் சிபல்.
இதற்கிடையே யுஜியை மூடக் கூடாது என்று அதன் ஊழியர் சங்கம் இப்போதே எதிர்ப்புத் தெரிவிக்க ஆரம்பித்துவிட்டது.
Leave a Reply