மதுரை: ரயில்வே பாதுகாப்புப்படையில், அதிகாரிகளாக வேலை வாங்கி கொடுப்பதாகக்கூறி, பலரிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்த ஹோமியோபதி டாக்டர், பெண் ஆகியோர் மதுரை சி.பி.ஐ., கோர்ட் உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரை சேர்ந்தவர் ஹோமியோபதி டாக்டர் செந்தில்குமார் (32). தென்காசியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி தங்கம் (47). ராதாகிருஷ்ணன் இறந்ததும் தங்கம் சென்னை போரூரில் குடியேறினார். சென்னை ரயில்வே தேர்வாணையத்தில் அதிகாரியாக வேலை பார்ப்பதாக செந்தில்குமாரிடம், தங்கம் அறிமுகமானார். ரயில்வே பாதுகாப்புப்படையில் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., உட்பட அதிகாரிகளுக்கான பணி நியமன ஆர்டர்களை பெற்றுத்தருவதாக தங்கம் கூறினார்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதியை சேர்ந்த வேலையில்லா பட்டதாரிகளிடம் வேலை வாங்கி கொடுப்பதாக செந்தில்குமார் அட்வான்சாக தலா 50 ஆயிரம் ரூபாய் வசூலித்து தங்கத்திடம் கொடுத்தார். போட்டோவுடன் கூடிய ரயில்வே பாதுகாப்புப்படை அடையாள அட்டைகள், போலி நியமன உத்தரவுகளை தயாரித்து பணம் கொடுத்தவர்களுக்கு தங்கம் வழங்கினார். இதுகுறித்து, விசாரிக்கையில் தங்கம் கொடுத்தது போலி நியமன உத்தரவு என தெரிந்தது.
பாதிக்கப்பட்டோர் சென்னை சி.பி.ஐ., கண்காணிப்பாளர் ஈஸ்வரமூர்த்தியிடம் புகார் கூறினர். அவரது உத்தரவுப்படி இன்ஸ்பெக்டர் சி.எஸ். மணி தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில் தங்கம், செந்தில்குமார் ஆகியோர் மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. தங்கம், செந்தில்குமாரை சி.பி.ஐ., அதிகாரிகள் சென்னையில் நேற்று கைது செய்து, மதுரை சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ஜூலை 1ம் தேதி வரை, தங்கம் திருச்சி மத்திய சிறையிலும், செந்தில்குமார் மதுரை மத்திய சிறையிலும் அடைக்க நீதிபதி என். வேலு உத்தரவிட்டார். தங்கம், செந்தில்குமாரிடம் ஏமாந்தவர்கள், சென்னை சி.பி.ஐ., கண்காணிப்பாளர் அலுவலகத்தின் 044 2827 0992 போனில் புகார் கூறும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Leave a Reply