வணங்காமண் கப்பலுக்கு தலை சாய்த்தது இலங்கை

posted in: மற்றவை | 0

தமிழக முதல்வர் கருணாநிதியின் தொடர் முயற்சியின் விளைவாக, இலங்கைத் தமிழர்களுக்கு உலகத் தமிழர்கள் வணங்காமண் கப்பலில் அனுப்பிய நிவாரணப் பொருட்களை ஏற்றுக்கொள்ள இலங்கை அரசு சம்மதித்து உள்ளது. இதற்கான உறுதிமொழியை வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவிடம் இலங்கை தூதர்கள் அளித்தனர்.

இலங்கைப் போரினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 3 லட்சம் தமிழர்களுக்கு உதவும் வகையில், உலகத் தமிழர்களால் வணங்காமண் என்கிற (கேப்டன் அலி) கப்பலில் நிவாரணப் பொருட்கள்அனுப்பப்பட்டன. ஆனால், இந்தக் கப்பலை தங்கள் நாட்டின் கடல் பகுதிக்குள் அனுமதிக்க இலங்கை அரசு மறுத்துவிட்டது.

இதனால் வேறு எங்கும் செல்ல முடியாத நிலையில், சென்னை நோக்கி வந்தது அந்தக் கப்பல். பாதுகாப்பு காரணம் கருதி சென்னை துறைமுகத்திற்குள் நுழையவும் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில் வணங்காமண் கப்பலை அனுமதிக்கவும், அதில் வந்துள்ள நிவாரணப் பொருட்களை இலங்கைத் தமிழர்களுக்கு விநியோகிக்கவும் இலங்கை அரசை இசைய வைக்குமாறு மத்திய அரசை தமிழக முதல்வர் கருணாநிதி கேட்டுக்கொண்டார்.

ஒருவாரமாக நிலவிவந்த இந்தப் பிரச்னை இப்போது முடிவுக்கு வந்துள்ளது.

இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு குறித்தும், தமிழர்களுக்கு சம அரசியல் அதிகாரங்கள் வழங்குவது குறித்தும் இந்திய அரசுடன் ஆலோசனை செய்ய அதிபர் ராஜபக்சேவின் சகோதரர்களான கோதபய ராஜபக்சே (ராணுவ செயலாளர்), பசில் ராஜபக்சே (அரசியல் ஆலோசகர்) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு டெல்லி வந்தனர்.

அவர்கள் நேற்று மாலை வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவைச் சந்தித்து ஆலோசனை செய்தனர்.அப்போது, வணங்காமண் கப்பலில் வந்துள்ள நிவாரணப் பொருட்களை ஏற்றுக்கொள்ளுமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார். இலங்கைத் தூதுவர்களும் ஒப்புக்கொண்டனர். இப்பொருட்கள் செஞ்சிலுவை சங்கம் மூல ம்பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு விநியோகிக்கப்படும்.

மேலும், இலங்கையில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தேவையான புனரமைப்பு பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அடுத்த 6 மாத காலத்தில் அனைத்து அகதிமுகாம்களும் அகற்றப்பட்டு, அங்கிருக்கும் மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பப்படுவார்கள் என்று இலங்கைக் குழுவினர்கள் தெரிவித்தனர்.

மாகாணங்களுக்கு குறிப்பிட்ட அரசியல் அதிகாரங்களை அளிக்கவும் இலங்கை அரசு தயாராக உள்ளது என அவர்கள் தெரிவித்தனர். இலங்கையின் இந்த நடவடிக்கைகளுக்கெல்லாம் இந்தியா உதவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *