அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரைச் சேர்ந்த எலினார் பென்ஸ் என்ற பெண்மணிக்கு 90 வயது. 15 பிள்ளைகள், 54 பேரக் குழந்தைகள், 37 கொள்ளுபேரன், பேத்திகள் கண்டவர். இந்த வயதில், கொள்ளுபேரன், பேத்திகளைப் பார்த்தப் பிறகு தன்னுடைய பழைய கனவு ஒன்றை இப்போது நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் பென்ஸ்.
73 ஆண்டுகளுக்கு முன் தான் கைவிட்ட பள்ளிப் படிப்பை இப்போது முடித்திருக்கிறார் பென்ஸ் பாட்டி.
அது 1936 ஆம் வருடம். சிகாகோ லேக் வியூ பள்ளியில் கடைசி வருடம் படித்துக் கொண்டிருந்தார் பென்ஸ். குடும்ப சூழ்நிலை படிப்பைத் தொடரவிடவில்லை. அதே சமயம் அவருடைய அக்கா வேலை பார்த்த இடத்திலேயே இவருக்கு வேலை தயாராக இருந்தது.
குடும்பமா படிப்பா என தராசில் இட்டு பார்த்தவர் படிப்பை ஓரம் கட்டிவிட்டு வேலைக்குப் போய்விட்டார்.
பள்ளிப் படிப்பை விட்டவர் நான்கைந்து வருடம் வேலை பார்த்திருக்கிறார். பிறகு ஜான் எஃப்.பென்ஸ் என்பவரை கல்யாணம் கட்டியிருக்கிறார். சிகாகோ நகரைவிட்டு புறநகர் பகுதியான முண்டியென்னுக்கு இடம்பெயர்ந்து விட்டிருக்கிறார்.
அடுத்த 23 வருடங்களில், மளமளவென குழந்தைகளை பெற்றெடுக்கும் வேலையைப் பார்த்திருக்கிறார் பென்ஸ். 15 குழந்தைகளைப் பெற்றெடுத்து அவர்களை ஆளாக்கினார். கொள்ளுப்பேரன் வரை பார்த்துவிட்ட இவருக்கு தன்னுடைய பள்ளிப் படிப்பை இடையில் விட்டதை மட்டும் மறக்க முடியவில்லை.
தன்னுடைய அம்மாவின் விடாது தொடரும் படிப்பு ஆசையை அறிந்த மகள் லாறி ஹாரிங்டன், அம்மா படித்த லேக் வியூ பள்ளிக்குச் சென்று விசாரித்திருக்கிறார். அவர்களுடைய கோரிக்கையை கேட்ட பள்ளிச் செயலாளர் கேரன் சிசிலியானோ இந்த விஷயத்தை தன்னுடைய கடமையாகக் கருதி பள்ளி முதல்வரிடம் பேசினார்.
நன்றாக ஆராய்ந்து பார்த்த பள்ளி முதல்வரும் ஆறுமாதம் மட்டுமே படிப்பை விட்ட பென்சுக்கு பள்ளிச் சான்றிதழ் அளிக்க ஒப்புக்கொண்டார். பென்சுக்கு பள்ளிப் படிப்பு முடித்ததற்கான சான்றிதழும் தொப்பியும் வழங்கப்பட்டன.
மே 30ஆம் தேதி 90 வயதை தொட்ட பென்சுக்கு அவருடைய பிறந்த நாள் பரிசாக இவை வழங்கப்பட்டன.
பென்ஸ், பள்ளியில் தரப்பட்ட தொப்பியை ஆசை ஆசையாக தலையில் அணிந்த காட்சியைக் கண்டு அவருடைய மகன், மகள்கள், பேரன், பேத்திகள் எல்லாம் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். அவருக்கு அளிக்கப்பட்ட சான்றிதழில் பிப்ரவரி 1, 1936 என்று தேதியும், அப்போது பள்ளி முதல்வராக இருந்த ஓலிஸ் விண்டரின் கையெழுத்தும் இடம்பெற்றுள்ளது.
இப்போது பென்சுக்கு என்னத் தோன்றுகிறது தெரியுமா? பள்ளிப் படிப்பு போதாது கல்லூரிக்குச் செல்லவேண்டும் என்று!
Leave a Reply