புதுடில்லி:ஏழைகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெய்ப்பால் ரெட்டி தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட், லோக்சபாவில் வரும் 6ம் தேதி தாக்கல் செய்யப்படுவதையொட்டி, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை நேற்று சந்தித்த ஜெய்ப்பால் ரெட்டி, ஏழைகளுக்கு வங்கிகளில் வழங்கப்படும் வீட்டுக் கடன்களுக்கு குறைந்தபட்சமாக 6.5 சதவீதம் வட்டி விதிக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது:
வீட்டுக் கடனாக ரூபாய் ஐந்து லட்சம் வரை பெறும் நபர்களுக்கு 6.5 சதவீத வட்டி விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அது போலவே, 20 லட்சம் ரூபாய் வரையுள்ள கடன்களுக்கு 7.5 சதவீதமும், நகர்ப்புறங்களில் 30 லட்சம் ரூபாய் வரை கடன் பெறும் நபர்களுக்கும் இதே விகிதத்திலும் வட்டி நிர்ணயிக்கப்படவேண்டும்.வரும் 2010ம் ஆண்டு நடக்க உள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை சிறப்பாக நடத்துவதற்கும், டில்லி மெட்ரோ ரயில் திட்டத்துக்கென கூடுதலாகவும் நிதி ஒதுக்குமாறும் நிதியமைச்சரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
நகர்ப்புறங்களில் கட்டமைப்பு வசதிகள் மற்றும் குடிசைப்பகுதிகளை மேம்படுத்துவதற் கும் கூடுதல் நிதி ஒதுக்குவதன் மூலம் மட்டுமே அடிப்படை வசதிகளை ஏற்படுத்த முடியும்.இவ்வாறு ஜெய்ப்பால் ரெட்டி கூறினார்.
Leave a Reply