விமானநிலையத்துக்கு தாமதமாக வந்த விமானப்படை மருத்துவரை, மும்பைக்கு புறப்பட இருந்த விமானத்தில் ஏற்றுவதற்கு அதிகாரிகள் மறுத்தனர். இதை அடுத்து போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து விமானத்தை நிறுத்தினார் அந்த மருத்துவர். அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் நடந்த இச் சம்பவத்தால் பெங்களூர் சர்வதேச விமானநிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பையைச் சேர்ந்தவர் விமானப்படை மருத்துவர் அக்ஷய். இவர், ஜெட்ஏர்வேஸ் மூலம் மும்பைக்கு வியாழக்கிழமை இரவு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார்.
ஆனால், 216 பயணிகளுடன் மும்பைக்கு விமானம் புறப்படத் தயாராக இருந்த நேரத்தில் சற்றுத் தாமதமாக வந்தார் அக்ஷய். அப்போது, அந்த விமானத்தில் அக்ஷய் செல்வதற்கு அதிகாரிகள் அனுமதிக்கவில்லையாம். இதனால் விமானத்தை நிறுத்துவதற்கு திட்டமிட்ட அக்ஷய், குறிப்பிட்ட விமானத்தின் தலைமை பைலட்டின் தொலைபேசி எண்ணை விமானநிலைய அதிகாரிகளிடம் பெற்றார். பிறகு அந்த பைலட்டை தொடர்புகொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். இதைத் தொடர்ந்து விமானம் தரையிறக்கப்பட்டது.
அனைத்து பயணிகளும் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். போலீஸார் சோதனையில் அந்த விமானத்தில் வெடிகுண்டு ஏதும் இல்லை. இது வெறும் புரளி என்று தெரியவந்தது.
தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்த அக்ஷய்யை போலீஸார்ர் கைது செய்தனர்.
Leave a Reply