வாஷிங்டன்: அடுத்த 100 நாட்களில் அமெர்க்கர்களுக்கு 6 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகள் துவங்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
சமீபத்திய உலகப் பொருளாதார மந்தம் காரணமாக அமெரிக்காவில் தொடர்ந்து பல லட்சம் பேர் பணியிழந்தனர். 25 வருடங்களில் இல்லாத அளவுக்கு பெரும் வேலையின்மைப் பிரச்சினை தலை விரித்தாடியது.
இதனால், அமெரிக்க நிறுவனங்கள் வேலைவாய்ப்பில் அமரிக்கர்களுக்கே முன்னுரிமை தரவேண்டும் என்றும், அதற்கேற்ப அமெரிக்க விசா வழங்குவதில் பல மாறுதல்களைச் செய்தும் உத்தரவுகளை வெளியிட்சார் அதிபர் ஒபாமா. நலிவுற்ற நிறுவனங்களுக்கு பல நூறு பில்லியன் டாலர்களை உதவித் தொகையாக வழங்கினார்.
திவாலான நிறுவனங்களை அரசே ஏற்று நடத்த வகைசெய்தார்.
இப்படிச் செய்ததன் மூலம் அமெரிக்கப் பொருளாதாரம் மீண்டும் மீட்சியை நோக்கித் திரும்பும் என்றும், அடுத்த 100 நாட்களில் 6 லட்சம் பேருக்கு வேலை கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும் நேற்று அறிவித்துள்ளார் ஒபாமா.
திங்கள்கிழமை வெள்ளை மாளிகையில் துணை அதிபர் ஜோ பிடன் உடனான சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய ஒபாமா கூறியதாவது:
இன்னும் நாம் கடந்து செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. தொழில் துறைக்கு அரசு அளித்துள்ள உதவி நிதியின் பலன்கள் தெரியத் துவங்கியுள்ளன. வேலை இழந்ததால் வருமானம் இழந்த மக்கள், தங்கள் செலவைக் குறைத்துக் கொண்டார்கள். நிறுவனங்கள் இதனால்தான் தடுமாறத் தொடங்கின. மேலும் மேலும் வேலை இழப்புகள் ஏற்பட்டுவிட்டன. இந்த விஷச் சுழலுக்கு முதலில் ஒரு தடையை ஏற்படுத்துவோம்’, என்றார் ஒபாமா.
அதேநேரம் கடந்த சில மாதங்களைக் காட்டிலும் இப்போது அமெரிக்காவில் பணியிழப்போர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஏப்ரல் மாதம் 6 லட்சம் பேர் பணியிழந்துள்ளனர். அதுவே மே மாதம் 345000 ஆகக் குறைந்துள்ளது. இதை அடியோடு குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.
பொருளாதார மந்தம் துவங்கியதிலிருந்து இதுவரை அமெரிக்காவில் வேலை இழந்தோர் எண்ணிக்கை மட்டும் 60 லட்சம் என்கிறது அமெரிக்க தொழிலாளர் புள்ளிவிவரத் துறை. ‘இதில் 10 சதவிகிதம் பேருக்கு புதிய வேலையை உருவாக்குவது மற்றும் இருக்கிற பணியாளர்கள் வேலை இழப்பைத் தடுப்பது’ என்பதே இப்போது அரசின் முன் உள்ள முதல் சவால் என ஒபாமா கூறியுள்ளார்.
இதற்கென பல புதிய புராஜெக்டுகளை அனுமதித்துள்ள ஒபாமா, ஏற்கெனவே கைவசம் உள்ள திட்டங்களையும் செயல்படுத்த ஆரம்பித்துள்ளார்.
அமெரிக்கா முழுவதிலும் உள்ள 98 விமான நிலையங்களைப் புதுப்பித்தல் மற்றும் பராமரித்தல், 1500 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை உடனடியாக முடுக்கி விடுதல், 107 தேசிய பூங்காக்களை அமைத்தல் போன்ற திட்டங்களை இந்த வாரமே ஆரம்பிக்க உத்தரவிட்டுள்ளார் ஒபாமா!
Leave a Reply