2 நக்ஸல்கள் சுட்டு கொலை-ஊடுறுவல் அபாயம்: தமிழகம் உஷார்

posted in: மற்றவை | 0

சென்னை: நக்சலைட்டுகள் ஊடுறுவலாம் என்ற தகவல் வந்ததைத் தொடர்ந்து தமிழக எல்லைப் பகுதிகள் அனைத்தும் தீவிரக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. வட மாநிலங்களுக்குச் செல்லும் ரயில்களில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் மாவோயிஸ்ட் நக்சலைட்கள் 50க்கும் மேற்பட்ட கிராமங்களைப் பிடித்து வைத்துக் கொண்டு அட்டகாசம் செய்து வருவது நாடு முழுவதையும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது அங்கு துணை ராணுவப் படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து ஒவ்வொரு கிராமமாக மீட்டு வருகின்றனர்.

மேற்கு வங்கத்தில் அட்டகாசம் செய்து வரும் மாவோ நக்சலைட்களுக்குத் தலைவனாக இருந்து செயல்படுவது ஆந்திர நக்சலைட் தலைவன் என்பதால், ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்குள் நக்சலைட்கள் ஊடுறுவலாம் என்று போலீஸாருக்கு எச்சரிக்கை வந்துள்ளது.

இதையடுத்து தமிழகத்திற்கும், ஆந்திரா [^], கர்நாடகத்திற்கும் இடையிலான எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் முக்கிய வனப் பகுதிகளான சத்தியமங்கலம், கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்டவற்றிலும் கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்துடனான எல்லை மாவட்டங்களான வேலூர், திருவள்ளூர் மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ஆந்திர எல்லை பகுதிக்கு தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் நேரடியாக சென்று பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “தமிழகத்திற்கு தற்போது நக்சலைட்டுகளால் ஆபத்து எதுவும் இல்லை. இருந்தாலும் முன் எச்சரிக்கையாக இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இதேபோல, வடமாநிலங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்துகிறது. அப்போது ரயில்களை கொளுத்தி நாசவேலையில் ஈடுபடலாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு எச்சரிக்கை செய்தி அனுப்பியுள்ளது.

இதன் பேரில் தமிழகத்தில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் வழக்கத்தை விட கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வட மாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பாக செல்கிறார்கள்.

ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்களுடன் தீவிர சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.

ஒரிஸ்ஸாவில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை:

ஒரிஸ்ஸாவில் இன்று இரண்டு மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேற்கு வங்கம், ஒரிஸ்ஸா, ஜார்கண்ட‌் உட்பட நாடு தழுவிய அளவில் நக்சல்கள் 48 மணி நேர பந்த்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இந் நிலையில் ஒரிஸ்ஸா மாநிலம் மல்கான்கிரி பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போலீசுக்கும் நக்ஸல்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. இதில் 2 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

நேபாள மாவோயிஸ்டுகள் தொடர்பா?:

இதற்கிடையே இந்திய நக்ஸல்களுக்கு நேபாள மாவோயிஸ்டுகளும் அரசும் உதவிக் கரம் நீட்டி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஆனால், இந்தப் புகாரை மறுத்துள்ள வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர மேனன் இந்தத் தொடர்புக்கான ஆதாரம் ஏதுமில்லை என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *