அஞ்சுகம் முத்துவேலர் பெயரில் இலவச ஆஸ்பத்திரி அமைக்க கருணாநிதி தனது வீட்டை வழங்கியுள்ளார்

posted in: அரசியல் | 0

24_002தமிழக அரசின் சார்பில் ஒரு கோடி ஏழைக் குடும்பங்களுக்கு “உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்” தொடக்க விழா நேற்று சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடந்தது. இந்நிகழ்வில் கருணாநிதி தனது வீட்டை வழங்குவதாக அறிவித்துள்ளார்.


விழாவுக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமை தாங்கினார். மத்திய சுகாதாரத்துறை மந்திரி குலாம் நபி ஆசாத் காப்பீட்டுத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் முதல்-அமைச்சர் கருணாநிதி பேசும்போது கூறியதாவது:-

இன்றைய விழா மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் தமிழ்நாட்டு மக்களுக்கு நலன் பயக்கும் ஒரு விழா. இந்த விழாவில் உங்களில் ஒருவன் என்ற முறையில் என் சார்பாக ஓர் அறிவிப்பினை செய்திட விரும்புகிறேன்.

பொது வாழ்க்கை என்பது புனிதமானது. அது என்றும் தூய்மையானதாக இருக்க வேண்டுமென்று நினைப்பவன் நான். நான் ஆட்சிப்பொறுப்புக்கு வருவதற்கு முன்பும்; பின்பும் என் பெயரில் வாங்கப்பட்ட சொத்து என்று பார்த்தால் –

கோபாலபுரத்தில் தற்போது நான் வசிக்கும் ஒரு வீடும் (தற்போதைய சந்தை மதிப்பு ரூ.8 கோடி) – திருவாரூருக்கு அருகில் காட்டூர் கிராமத்தில் பதினான்கு ஏக்கர் நிலமும் தான் உள்ளது.

இந்தியாவிலேயே தனி பங்களா என்று இல்லாமல், தெருவிலே உள்ள பல வீடுகளில் ஒன்றாக ஒரு முதல்-அமைச்சரின் வீடு இருப்பது என்று எடுத்துக்கொண்டால், அது என்னுடைய வீடாகத்தான் இருக்குமென்று நினைக்கிறேன். நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்கும் நேரத்தில் எல்லாம் – இப்போது கோபாலபுரத்தில் இந்த வீட்டிற்கு பதிலாக அரசு பங்களா ஒன்றில் நான் வசிக்க வீடு ஏற்பாடு செய்யப்பட்ட போது, அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.

வருகின்ற பார்வையாளர்களையும், வெளிநாட்டுக்காரர்களையும் என் இல்லத்தில் வரவேற்றுப் பேசுவதற்குக்கூட போதுமான அளவிற்கு இடம் கிடையாது. புகைப்படக்காரர்கள் நின்று படம் எடுக்கக்கூட வசதி இல்லாத நிலை என்பதை தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் அனைவரும் அறிவார்கள்.

கோபாலபுரத்தில் நான் வசிக்கும் இந்த இல்லத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு 1968-ல் என் பிள்ளைகளின் பெயரில் செட்டில்மென்ட் எழுதி பதிவு செய்துள்ளேன். தற்போது அந்த இல்லத்தினை என்னுடைய காலத்திற்கு பிறகும், என் மனைவி காலத்திற்குப் பிறகும், தமிழக அரசுக்கோ அல்லது கலைஞர் அறக்கட்டளைக்கோ உடமையாக்குவதென்றும், அந்த இல்லத்தில் ஒரு இலவச மருத்துவமனையினை என் தாய் தந்தையர்களான அஞ்சுகம் முத்துவேலர் பெயரில் நடத்துவதென்றும் அதற்கு என் மனைவி, மற்றும் பிள்ளைகளின் ஒப்புதலையும் பெற்றுள்ளேன் என்பதையும் நான் அரசின் மருத்துவத்துறை சம்மந்தப்பட்ட இந்த விழாவில் அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.

இதனை கேட்ட மேடையில் இருந்த தலைவர்களும், கூட்டத்திற்கு வந்திருந்த பொதுமக்களும் கைதட்டி வரவேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *