அனில் அம்பானி குழுமம் ஸ்பீல்பெர்க் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

17_005அனில் அம்பானி குழுமம் (ஏடிஏஜி) ஹாலிவுட் திரைப்பட இயக்குநர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் டிரீம்வொர்க்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.


இந்த ஒப்பந்தப்படி டிரீம்வொர்க்ஸ் நிறுவனத்தில் இரு நிறுவனங்களும் சம பங்குகளைக் கொண்டிருக்கும். புதன்கிழமை கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின்படி இரு நிறுவனங்களும் முதல் கட்டமாக ரூ. 4,125 கோடி முதலீட்டில் திரைப்படங்களைத் தயாரிக்கும். ஹிந்திப் பட உலகில் ஆண்டு முதலீட்டில் மூன்றில் ஒரு பங்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.

பாரமவுண்ட் நிறுவனத்துடனான பேச்சு வார்த்தை முறிந்ததை அடுத்து ஸ்பீல்பெர்க், ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
இரு நிறுவனங்களும் இணைந்து மூன்று ஆண்டுகளுக்குத் திரைப்படங்களைத் தயாரிக்கும். ஆண்டுக்கு ஐந்து முதல் ஆறு திரைப்படங்களை டிரீம்வொர்க்ஸ் தயாரிக்கும். சர்வதேச அளவில் இந்நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களை விநியோகிக்கும் பொறுப்பை வால்ட் டிஸ்னி நிறுவனம் மேற்கொள்ளும் எனத் தெரிகிறது.

நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் ரிலையன்ஸ் சார்பில் அமிதாப் ஜுன்ஜுன்வாலா இடம்பெறுவார். ஸ்பீல்பெர்க் மற்றும் ஸ்னைடர் ஆகியோர் குழுவில் இடம்பெறுவர்.

சர்வதேச அளவில் அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான திரைப்படங்களை மட்டுமே தயாரிக்கப் போவதாக ஸ்பீல்பெர்க் குறிப்பிட்டார். அனிமேஷன் படங்கள் தயாரிப்பது ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *