அமெரிக்காவில் ஒபாமா ஆட்சி போல இலங்கையிலும் ஒரு நாள் தமிழன் ஆட்சி அமையும்: மு.கருணாநிதி

posted in: அரசியல் | 0

020அமெரிக்காவில் அடிமைகளாக இருந்த கறுப்பர்கள் ஆட்சிக்கு வந்துள்ளது போல, இலங்கையிலும் ஒரு நாள் தமிழன் ஆட்சி ஏற்படும் என்று முதல்வர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்தார்.
‘‘இலங்கையில் தமிழர்களுக்கு வாழ்வுரிமையைப் பெற்றுத் தருவது மற்றும் மருந்து மற்றும் உணவுப் பொருள்கள் கிடைக்க ஏற்பாடு செய்வது’’ குறித்து, பேரவையில் நேற்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து ஓபன்னீர்செல்வம் (அதிமுக), பீட்டர் அல்போன்ஸ் (காங்.), ஜி.கே.மணி (பாமக), ராமசாமி (இந்திய கம்யூ.) ஆகியோர் பேசினர்.

இதற்கு பதில் அளித்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை, தமிழ் மொழிக்கு சம தகுதி, தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு ஆகியவற்றுக்காக போராட வேண்டியவர்களாக இருக்கிறோம். இனி தமிழ் ஈழத்திற்காக போராடுகிறோம் என்று சொன்னால், திராவிட நாடு கொள்கையை அண்ணா கைவிட்டது பற்றி இங்கே குறிப்பிட வேண்டும்.

கட்சி வேண்டுமா, திராவிட நாடு வேண்டுமா என்று கேட்டால், கட்சி இருந்தால் தான் திராவிட நாடு கேட்க முடியும், ஆகவே எங்கள் கட்சி இருக்க வேண்டும் என்று கூறி, பிரிவினை கொள்கையை அண்ணா கை விட்டார்.

ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், நாம் நடத்துகின்ற போராட்டத்தால் மக்கள் பாதிக்கப்பட்டால் கவலையில்லை என்றால், பிறகு மக்களுக்காக எதற்கு இந்த இயக்கம் என்று கேட்காமல் இருக்க மாட்டார்கள். அந்தக் கேள்விக்கு நாம் பதில் சொல்லியாக வேண்டும். எந்தக் காரியமானாலும், அது மக்களைப் பாதிக்கக் கூடிய அளவிற்கு அமைகிற நேரத்தில் சற்று ஓய்வெடுத்து, சிந்தித்து – எந்த வழியிலே செல்லலாம் என்று தீர்மானிக்க வேண்டும்.

இலங்கையிலே தமிழர்களை மதிக்கின்ற அரசாக ஒரு அரசு அமைய வேண்டும். அது எதிர்காலத்திலே ஜனநாயக அடிப்படையில் தமிழர்களை பெரும்பான்மையாகக் கொண்ட சிங்களவர்களையும் சேர்த்து ஆளுகின்ற, தமிழனுடைய அரசாக அமையுமேயானால் நம்மைப் போல மகிழ்ச்சி அடைபவர்கள் யாரும் இந்த உலகத்தில் இருக்க முடியாது.

இன்றைக்கு அமெரிக்காவைப் பற்றிச் சொல்கிறார்களே, அதைப் போல அமையலாம். அமெரிக்காவை வெள்ளைத் தோல்தான் ஆள முடியும், அதிபராக இருக்க முடியும் என்ற ஒரு நிர்பந்தத்தை மாற்றியமைத்து ஒரு கறுப்புத் தோல் ஆண்டு கொண்டிருக்கிறது. இதை காணும்போது, இலங்கையிலும் தமிழர்கள் அரசு அமைவதற்கு வெகுதூரம் இல்லை என்ற அந்த நம்பிக்கையை நாம் பெறலாம்.

அந்த நம்பிக்கையோடு நாம் நம்முடைய கருத்துகளை, செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். ராஜபக்ஷேவை இங்கே கொண்டு வந்து குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தப் போகிறோமா? தமிழர்கள் வாழ்வாதாரத்தைப் பெருக்க வேண்டுமேயானால் அங்கே இருக்கின்ற சிங்கள அரசின் மூலமாகத்தான் அதைச் செய்ய முடியும். இந்திய அரசு அதற்கான வற்புறுத்தலைச் செய்ய வேண்டும் என்பதிலே மாறுபாடான கருத்து இல்லை.
தமிழனைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது என்பது உண்மை என்றால், சிங்களர்களுடைய கோபத்தை அதிகமாக ஆக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நான் இலங்கையின் சரித்திரத்தை ஆதி முதல் அந்தம் வரையிலே நன்றாகத் தெரிந்தவன். அப்படி தெரிந்த காரணத்தால்தான் வெள்ளைக்கார சர்க்காரால் நாடு கடத்தப்பட்டு, வேலூர் கோட்டையில் 16 ஆண்டு காலம் குடும்பத்தோடு சிறைவைக்கப்பட்டு, அந்தக் கோட்டைக்குள்ளேயே பிணமான, கண்டி ராஜாவுக்கு வேலூர் ஆற்றங்கரை ஓரத்தில் முத்து மண்டபம் எழுப்பினேன்.

கண்டி ராஜனுடைய கதையை நாவலாக எழுதினேன். அதிலே வருகின்ற பண்டார வன்னியனை கட்டபொம்மனுடைய தளபதி சுந்தரலிங்கத்துடன் இணைத்திருப்பேன். கடைசியாக வருகின்ற கதாநாயகன், வெள்ளைக்கார சிப்பாய்களிடமிருந்து தப்பி ஒரு குதிரையிலே ஏறிச் செல்வான். எங்கே போனான் என்று தெரியாமலே பறந்து விடுகிறான். கடைசியாக குதிரை ஒன்று போவதுதான் தெரிகிறது என்று கதையை முடித்திருக்கிறேன். 10 ஆண்டுகளுக்கு முன்பே இந்த எச்சரிக்கையோடு கதையை முடித்திருக்கிறேன்.

இன்றும் அந்தக் கதை நடப்பது போல தெரிகிறது. இங்கே வணங்காமண் கப்பலைப் பற்றிப் பேசப்பட்டது. வணங்காமண் கப்பல் திரும்பிச் செல்லாது அதிலே உள்ள பொருள்கள் இலங்கைத் தமிழர்களுக்குத்தான் போய்ச் சேரும்.

தமிழர்களுக்கு என்ன வேண்டும் என்பதை அறிந்து செயல்பட, இலங்கை அமைச்சர் தொண்டமான் போன்றவர்கள் என்னை பல முறை சந்தித்தார்கள். தொண்டமானின் மகன் கூட நேற்றுமுன்தினம் சந்தித்தார். நீங்கள் யாராவது குழுவாக வந்து அங்கே பார்க்கலாமே அனுப்புங்களேன் என்று கேட்டார். மத்திய அரசின் அனுமதியோடு தான் இதைச் செய்ய முடியும் என்று கூறியிருக்கிறேன்.

அதற்கு முன்பு நாங்கள் நம்பிக்கை பெறுகிற அளவுக்கு அங்கே தமிழர்களுடைய வாழ்வாதாரத்தைப் பெருக்குங்கள். அதற்கு உங்கள் துணையை நாடுகிறோம் என்று தொண்டமானிடம் சொல்லியிருக்கிறேன். அவரும் சென்று சொல்வார். நல்ல பதில் கிடைக்குமென்று எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *