ஆசிரியர் பயிற்சி 2ம்கட்ட கவுன்சிலிங்: 6,000 இடத்துக்கு விண்ணப்பமே இல்லை

posted in: கல்வி | 0

சென்னை: ஆசிரியர் பயிற்சி சேர்க்கைக்கான முதல் கட்ட கவுன்சிலிங்கில் 11 ஆயிரம் இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள 10 ஆயிரம் இடங்களில் அறிவியல் பிரிவில் 6,000 இடங்களுக்கு விண்ணப்பங்களே இல்லை. அதனால், 4,000 இடங்களை மட்டும் நிரப்புவதற்கான இரண்டாம்கட்ட கவுன்சிலிங், வரும் 24, 25 தேதிகளில் திருச்சியில் நடக்கிறது.

அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றை நிரப்புவதற்கான கவுன்சிலிங், கடந்த 2ம் தேதி முதல் 18ம் தேதி வரை திருச்சியில் நடந்தது. மொத்தம் உள்ள 21 ஆயிரம் இடங்களில் 11 ஆயிரம் இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இன்னும் 10 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. அறிவியல் பிரிவில் மொத்தம் 11 ஆயிரம் இடங்கள் இருந்தன. இதற்கு, 9,037 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் 4,500 பேர் மட்டுமே “சீட்’ பெற்றதாகவும், மற்றவர்கள் சேரவில்லை என்றும் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, தற்போதைய நிலவரப்படி அறிவியல் பிரிவில் 5,967 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப விண்ணப்பங்களே இல்லாததால், இந்த இடங்கள் அப்படியே இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவை அனைத்தும், தனியார் பள்ளிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள். மீதமுள்ள 4,000 இடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், 24, 25 தேதிகளில், ஆக்ஸ்போர்டு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திலும் (கலைப்பிரிவு), நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திலும் (தொழிற்கல்வி பிரிவு) நடைபெறும் என்று இயக்குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார். இதற்கு தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு, கவுன்சிலிங் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
பிரிவு வாரியாக தற்போதுள்ள காலியிடங்கள் விவரம்:
பாடப் பிரிவு ஓ.சி., பி.சி., பி.சி.எம்., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி., மொத்தம்
அறிவியல் 1,354 1,952 296 1,458 620 205 82 5,967
கலைப்பிரிவு 460 593 124 405 316 94 39 2,031
தொழிற்கல்வி 336 684 140 427 295 80 26 1,988
மொத்தம் 9,986
இரண்டாம் கட்ட கவுன்சிலிங் கட்-ஆப்
கலைப்பிரிவில் ஓ.சி.,க்கு 666 மதிப்பெண்கள், எஸ்.சி.,க்கு 645, எஸ்.சி.ஏ.,வுக்கு 632 மதிப்பெண்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொழிற்கல்வி பிரிவில், ஓ.சி.,க்கு 737, எஸ்.சி.,-எஸ்.சி.ஏ.,பிரிவினருக்கு 732 மதிப்பெண்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதர பிரிவில் மொத்தம் உள்ள இடங்களைவிட, விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை குறைவு என்பதால், அதற்கான கட்-ஆப் வெளியிடவில்லை. அனைத்து மாணவர்களுக்கும் கடிதம் அனுப்பபட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *