சென்னை: “”இன்று நிகழும் சந்திரகிரகணம் ஆஸ்திரேலியா, அமெரிக்கா
உள்ளிட்ட நாடுகளில் மட்டுமே தெரியும். இந்தியாவில் தெரியாது,” என அறிவியல் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது.
சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் செல்லும்போது, பூமியின் நிழல், சந்திரனின் ஒளியை சற்று குறைக்கிறது. இதை சந்திர கிரகணம் என்கிறோம். சந்திரன் முழுமையாக மறைக்கப்படுவதில்லை. இந்த நிகழ்வு பவுர்ணமியான இன்று நடைபெறும். இது குறித்து சென்னை, அறிவியல் தொழில் நுட்ப மையத்தின் செயல் இயக்குனர் அய்யம்பெருமாள் கூறியதாவது: இன்று நடைபெறும் சந்திர கிரகணம், இந்திய நேரப்படி பகல் 2 மணிக்கு துவங்கி, 4.15 மணிக்கு முடிவடைகிறது. இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியாது. ஆஸ்திரேலியா, பசிபிக் கடல் பகுதியை சுற்றியுள்ள நாடுகள், அமெரிக்காவில் தெரியும். சூரியகிரகணம்: இம்மாதம் ஜூலை 22ம் தேதி, சூரிய கிரகணம் நடைபெறுகிறது. சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது, சூரியனை சந்திரன் மறைப்பதைக் காணமுடியும். இதை சூரிய கிரகணம் என்கிறோம். இந்த நிகழ்வு, இந்திய நேரடிப்படி காலை 6.05 மணி முதல் 7.15 மணி வரை நடைபெறுகிறது. 63 சதவீதம் வரை சூரியனை மறைக்கும் நிகழ்வை பார்க்கலாம். வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. அதற்குரிய உபகரணங்கள் மூலம் பார்க்கலாம். வெல்டிங் செய்வதற்காக பயன்படும் கண்ணாடி (நெம்பர் 14) மற்றும் சோலார் வடிகட்டி ஆகியவை மூலம் பார்க்கலாம். இவை ஒரு லட்சம் மடங்கு ஒளிக்கற்றையை குறைத்து காட்டும். சென்னை கோள அரங்கத்தில் அனைவரும் காணும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அய்யம்பெருமாள் கூறினார்.
Leave a Reply