மதுரை : “மின்வாரியத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணிகளுக்கு தகவல் தொழில் நுட்ப டிப்ளமோவையும் தகுதியாக கருத கோரிய மனு குறித்து மின்வாரிய சேர்மனுக்கு நோட்டீஸ் அனுப்ப,’ மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. “இப்பணி நியமனங்கள் கோர்ட்டின் இறுதி உத்தரவை பொறுத்து அமையும்,’ எனவும் குறிப்பிட்டது.
நெல்லை மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த பிரபாகரன் தாக்கல் செய்த ரிட் மனு: நான் 2002ல் தகவல் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளேன். மின்வாரியம், தொழில்நுட்ப உதவியாளர்களை மாநில பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்து வருகிறது. தொழில்நுட்ப உதவியாளர்களுக்கு எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜியரிங் பிரிவில் டிப்ளமோ பெற வேண்டும் என தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத்திற்கும், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் பாடத்திற்கும் பெரிய வேறுபாடு கிடையாது. பாடத்திட்டங்களும் ஒன்றாகவே உள்ளன. எனவே தகவல் தொழில்நுட்பத்தில் டிப்ளமோவையும் இப்பணிக்கு ஒரு தகுதியாக கருத வேண்டும் என மின்வாரிய சேர்மன், வேலை வாய்ப்பு அலுவலருக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே தகவல் தொழில்நுட்ப டிப்ளமோவையும் ஒரு தகுதியாக கருத உத்தரவிட வேண்டும். எனக்கு மீண்டும் நேர்முக தேர்வுக்கு அழைக்க உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி எம்.சத்யநாராயணன், மனு குறித்து மின்வாரிய சேர்மனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும் நீதிபதி, “”இப் பணி நியமனங்கள் அனைத்தும் இக்கோர்ட்டின் இறுதி உத்தரவை பொறுத்து அமையும்,” என்றார்.
Leave a Reply