எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு டைரக்டர் சீமான் எச்சரிக்கை

posted in: மற்றவை | 0

tblgeneralnews_15274775029சென்னை : “”தமிழ்ப் பெண்களுக்கு மறைமுகமாக கேடு விளைவிக்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள இலங்கை அரசின், “வடக்கின் வசந்தம்’ திட்டம் தொடர்பாக ஆலோசனை கூற, தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் போகக்கூடாது; மீறினால் அவரது வீடு, அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும்,” என்று சினிமா டைரக்டர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் சென்னையில் நேற்று அவர் கூறியதாவது: இலங்கை வடக்கு மாகாணத்தை சீரமைக்க, 19 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவராக இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷேவின் தம்பியும், சிறப்பு ஆலோசகருமான பசில் ராஜபக்ஷே உள்ளார். ராணுவம் மற்றும் காவல் துறையைச் சேர்ந்த எட்டு பேர் மற்றும் ராஜபக்ஷேவின் மற்றொரு தம்பியான கோத்தபய ராஜபக்ஷேவும் இக்குழுவில் உள்ளனர். இக்குழுவில் தமிழர் ஒருவர் கூட இல்லை.

இலங்கையின் நெற்களஞ்சியம் என்று கூறப்பட்ட மாந்தை, அடம்பன் பகுதியைச் சேர்ந்த 98 சதவீதம் பேர் காணாமல் போயுள்ளனர். இலங்கை அரசின் மீள் குடியேற்றத் திட்டத்திற்கு இந்திய அரசு மற்றும் தமிழக அரசு அளித்துள்ள நிதி உதவியைக் கொண்டு இலங்கையில் ராணுவ முகாம்களுக்கும், சிங்களர்களை மட்டுமே கொண்டுள்ள காவல் துறைக்கு கட்டடங்களும் கட்டப்பட்டு வருகின்றன.

தமிழர்களை அவர்களது பூர்வீக இடத்தில் இல்லாமல் பல்வேறு இடங்களில் குடியமர்த்தும் திட்டத்திற்கும் இந்நிதி தான் பயன்படுத்தப்படுகிறது. இச்செயல் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், இலங்கை சென்று ராஜபக்ஷேயை சந்தித்து விட்டு வந்தார். தமிழர் நலனைப் பற்றி கண்டு கொள்ளாமல், சிங்கள அரசுக்கு சாதகமான வகையில் அவர்களது சமீபத்திய செய்திகள் உள்ளது வருத்தமளிக்கிறது.

இலங்கைத் தமிழர்களுக்கு நல்லது செய்வதைப் போல நாடகமாடும் ராஜபக்ஷேவின் அழைப்பை ஏற்று எம்.எஸ்.சுவாமிநாதன் இலங்கைக்கு செல்லக்கூடாது. அவர் செல்லமாட்டேன் என்று ஒரு வாரத்திற்குள் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இல்லையேல் அவரது வீடு, அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம் நடத்துவோம். புதிய தலைமையில் விடுதலைப் புலிகள் அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது; இது தேவையற்றது. இவ்வாறு சீமான் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *