சென்னை: ஏழை மக்கள் குடியிருக்க ஒரு வீட்டு மனை இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும்போது எம்.எல்.ஏக்களுக்கு வீட்டு மனை வழங்கும் திட்டம் தேவையற்ற ஒன்று. அதை காங்கிரஸார் கோரியிருப்பது கண்டித்தக்கது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன் கூறியுள்ளார்.
இதுகுறித்து வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:
பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் இதர சலுகைகளை, அந்தந்த அவைகளே முடிவு செய்து செயல்படுத்துவது ஆரோக்கியமான மரபு அல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொடர்ந்து சுட்டிகாட்டி வந்துள்ளது.
தற்போது தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் முடிவில் எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.50 ஆயிரம் ஊதியம், முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.10 ஆயிரம் ஊதியம் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு வீட்டுமனை உள்ளிட்ட சலுகைகளை வழங்குவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
இது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தங்களது சொந்த நலம் குறித்த முடிவுகளைத் தாங்களாகவே எடுத்து வழங்கிக் கொள்கிறார்கள் என்ற தவறான கருத்தை மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.
எம்.எல்.ஏ.க்களுக்கு வீட்டுமனை என்ற கோரிக்கை சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரால் முன்வைக்கப்பட்டபோது, அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான ஏழை, எளிய குடும்பங்கள் வீட்டு மனைப்பட்டா ஒதுக்கக் கோரி மனுகொடுத்து ஏங்கி நிற்கையில், அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு முனையாமல், எம்.எல்.ஏ.க்களுக்கு வீட்டுமனை வழங்க முன்னுரிமை கொடுத்திருப்பது முறையற்ற முடிவு.
ஏற்கனவே அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஏகமனதாக கோரிக்கை விடுத்தால் மட்டுமே பரிசீலிக்கப்படும் என்று அறிவித்திருந்த முதல்-அமைச்சர், இப்போது அதை மாற்றி 100 எம்.எல்.ஏ.க்களுக்கு குறையாமல் கோரினாலே அது ஏற்கப்படும் என்று நிலை எடுத்தது சரியன்று.
ஆளும் கூட்டணியான தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மட்டும் சேர்ந்து கோரிக்கை விடுத்தாலே அது 100 என்ற எண்ணிக்கையைத் தாண்டிவிடும் என்பதாலேயே இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த முடிவை மாநில அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் சொந்தக் கோரிக்கைகளை விடுத்து மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து செயலாற்றுவதே சாலச் சிறந்தது.
சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் உள்ளிட்ட சலுகைகளைக் குறித்து ஆய்வு செய்து அரசுக்குப் பரிந்துரை செய்ய நீதிபதி ஒருவர் தலைமையில், தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளர், அவை முனைவர், எதிர்க்கட்சித்தலைவர் போன்றோரைக் கொண்ட குழு அமைத்து முடிவுகள் எடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக கடல் பகுதியில் காணாமல் போகும் மீனவர்களை கண்டுபிடிப்பதற்காக இந்திய-இலங்கை கூட்டு ஏற்பாட்டில் இலங்கை கடல் பகுதியில் உள்ள தீவுப்பகுதிவரை சென்று தேடும் வகையில் நிரந்தரமாக 3 படகுகளை இந்திய அரசே ஏற்பாடு செய்யவேண்டும்.
இறந்த அல்லது கடலில் மூழ்கிக் காணாமல் போன மீனவர் குடும்பங்களுக்கு தமிழக அரசு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் நிதியாகவும், அக்குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்டும் என்று கூறியுள்ளார் வரதராஜன்.
Leave a Reply