திருநெல்வேலி:குழந்தைகள் கடத்தலில் துப்புதுலக்க உதவிய திருச்சி ஆட்டோ டிரைவருக்கு நெல்லை எஸ்.பி., பரிசு வழங்கினார்.திருச்சி, கோவை, உடுமலை பகுதிகளில் கடத்தி நெல்லை மாவட்டம் வள்ளியூர் அன்பு சிறுவர் இல்லத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்ட 13 குழந்தைகள் மீட்கப்பட்டன. இதில் துப்புதுலக்க திருச்சி அரசு ஆஸ்பத்திரி ஸ்டாண்ட் ஆட்டோ டிரைவர் ஜோசப் உதவினார்.
சம்பவத்தன்று திருச்சி ஆஸ்பத்திரியில் இருந்து ஒரு பெண் ஒன்றரை வயது பெண் குழந்தையுடன் ஜோசப்பின் ஆட்டோவில் ஏறினார். பஸ் ஸ்டாண்டிற்கு போகச்சொன்னார். குழந்தை அழுதுகொண்டே இருந்தது. ஆனால், அந்த பெண் அழுகையை நிறுத்த முயற்சிக்காமல் அங்கிருந்து கிளம்புவதிலேயே குறியாக இருந்தார். பஸ் ஸ்டாண்டில் இறங்கிய பிறகும் வெவ்வேறு பஸ்களில் மாறிமாறி உட்கார்ந்தார். இதனை கவனித்த ஆட்டோ டிரைவர் ஜோசப், அந்த பெண்ணிடம் “”உங்கள் பை ஒன்றை ஆஸ்பத்திரி முன்பாக தவறவிட்டுவிட்டீர்கள்” என கூறி அழைத்துவந்தார்.
அந்த பெண்ணை நைசாக பேச்சுகொடுத்து ஏற்றி குழந்தையுடன் புறநகர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். நெல்லை டி.ஐ.ஜி., கண்ணப்பன் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மீட்கப்பட்ட அந்த குழந்தை திருச்சி வாழவந்தானை சேர்ந்த சுசிலாவின் ஒன்றரை வயது மகள் காயத்ரி. குழந்தையை கடத்திய தனமணி கைதானார். குழந்தை கடத்தல் என தெரிந்ததும் உஷாராக இருந்து மீட்க உதவிய ஆட்டோ டிரைவர் ஜோசப்பிற்கு நெல்லை எஸ்.பி., ஆஸ்ரா கர்க் ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கினார்.
Leave a Reply