கறுப்புப் பணத்தை மீட்க நடவடிக்கை தொடங்கிவிட்டது: மன்மோகன்

posted in: மற்றவை | 0

வெளிநாடுகளில் நமது நாட்டவர் பதுக்கிவைத்துள்ள கறுப்புப் பணத்தை மீட்க நடவடிக்கைகள் தொடங்கி விட்டதாக பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவையில் வியாழக்கிழமை தெரிவித்தார்.


கேள்வி நேரத்தின் போது பேசிய பாஜக எம்.பி. பிரகாஷ் ஜவதேகர், “நூறு நாள்களுக்குள் கறுப்புப் பணத்தை மீட்க அரசு என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளது” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த பிரதமர், “வெளிநாட்டுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்கும் விஷயத்தில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி சிறப்புக் கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்’ என்றார்.

முன்னதாக புதன்கிழமை மாநிலங்களவையில் பேசிய பிரணாப் முகர்ஜி, “கணக்கில் காட்டாமல் பணத்தை வைத்திருப்பதைத் தடுக்கும் வகையில் இரட்டை வரி விதிப்பு முறையை அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது. கறுப்புப் பண பரிமாற்றத்தைத் தடுக்கும் வகையில் 100 நாடுகளுடன் தகவல்களை பரிமாறிக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்திருந்தார்.

ஜி-8 மாநாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, “வளர்ச்சியடைந்து வரும் நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் நிதி உதவி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) உள்பட சர்வதேச நிதி நிறுவனங்கள் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பைப் பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *