சென்னை: “கலை, அறிவியல் பாடப் பிரிவுகளுக்கும், கல்லூரிகளுக்கும் இணைப்பு வழங்க அண்ணா பல்கலைக் கழகச் சட்டத்தில் எந்தத் தடையும் இல்லை’ என, அப்பல்கலைக் கழகம் சார்பில் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
இன்ஜினியரிங் கல்லூரிகளில், இன்ஜினியரிங் அல்லாத பிற கலை மற்றும் அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு அண்ணா பல்கலை இணைப்பு வழங்குவதை எதிர்த்து தனியார் கலை, அறிவியல் கல்லூரிகள் நிர்வாகிகள் சங்கத்தின் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்கும்படி, சென்னை, கோவை, நெல்லை அண்ணா பல்கலைகளுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியது.
இவ்வழக்கில் சென்னை அண்ணா பல்கலை தாக்கல் செய்த பதில்:அண்ணா பல்கலைச் சட்டத்தில், கலை, அறிவியல் பாடங்களுக்கு இணைப்பு வழங்கவும், அக்கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்கவும் எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. எம்.சி.ஏ., – எம்.பி.ஏ., படிப்புக்கள் தொழில்நுட்பப் படிப்புக்கள் என அங்கீகாரம் செய்து, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) பட்டியலில் இடம்பெற்றுள்ளபோது, இளநிலை வகுப்புக்களான பி.சி.ஏ., – பி.பி.ஏ., பாடங்களுக்கு அண்ணா பல்கலை ஒப்புதல் வழங்க முடியாது எனக் கூற முடியாது. யு.ஜி.சி.,யும், “இதுபோன்ற படிப்புக்களை அண்ணா பல்கலை வழங்க முடியாது’ எனத் தடை விதிக்கவில்லை.
மேலும், பொறியியல் சம்பந்தமில்லாத, தொழில்நுட்பப் பாடப் பிரிவல்லாத பி.எஸ்சி., எலெக்ட்ரானிக் மீடியா, கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், விஷூவல் கம்யூனிகேஷன் உள்ளிட்ட பாடங்கள் அண்ணா பல்கலையில் நடத்தப்படுகின்றன.சட்டத்துக்கு உட்பட்டே பாடப் பிரிவுகளுக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது. இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதேபோல, கோவை, நெல்லை அண்ணா பல்கலைக் கழகங்கள் சார்பிலும் பதில்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெய்சந்திரன், விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்தார்.
Leave a Reply