குடும்ப கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பெண்களை கொல்வது உள்பட அவர்களுக்கு எதிராக வன்கொடுமை நிகழ்த்தப்படுவது நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்ளும் அவமானமான செயல் என்றார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.
மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டுவந்து பேசிய மார்க்சிஸ்ட் தலைவர் பிருந்தா காரத், நம் நாட்டில் குடும்ப கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றார்.
இந்நிலையில் இதற்குப் பதிலளித்து பேசிய ப.சிதம்பரம், பெண்களுக்கு எதிராக வன்கொடுமை அதிகரித்து வருவதற்கு வேதனை தெரிவித்து மேற்கண்டவாறு கூறினார்.
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் தலித் இளைஞர் ஒருவரும், முஸ்லிம் இளம்பெண்ணும் கொல்லப்பட்டனர். இந்தக் காதலர்களை குடும்பத்தின் கெüரவத்தைக் காக்கிறோம் என்ற பெயரில் கொன்றுள்ளனர். இந்த செய்தியை பத்திரிகையில் படித்து அதிர்ச்சியுற்றேன்.
இதுபோன்று பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் அவமானமாகவே கருத வேண்டும்.
குடும்ப கௌரவத்தைக் காப்பாற்றுவதற்காக பெண்கள் கொல்லப்படுவதை அடையாளம் காணுவதோ, அவற்றை வகைப்படுத்துவதோ கடினமான செயல்.
இந்தக் குற்றத்தைத் தடுப்பதற்கு தனிப்பட்ட சட்டம் ஏதும் இல்லை. இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் மூலம்தான் இதுபோன்ற குற்றங்களை அணுகுகிறோம்.
எனினும், குடும்ப கௌரவத்தைக் காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் பெண்களுக்கு எதிராக வன்கொடுமை அதிகரித்துவரும் விஷயத்தில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார் ப.சிதம்பரம்.
Leave a Reply