பொள்ளாச்சி அருகே கூட்டுறவு வங்கியில் காவலாளியின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொன்ற கொள்ளையர்கள், அலாரம் ஒலித்ததால் தப்பிவிட்டனர். போலீசாரிடம் சிக்கிய 5 பேரிடம் விசாரணை நடக்கிறது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த வடசித்தூர் அருகே குருநெல்லிபாளையத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி (60). அதே பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் இரவு நேர காவலாளியாக பணியாற்றி வந்தார்.
நேற்று நள்ளிரவு 2 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்துக்கு காரில் வந்தனர். அங்கு படுத்திருந்த சின்னசாமியின் கழுத்தை கயிறால் இறுக்கினர். சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த கும்பல், வங்கியின் 4 ஷட்டர்களில் ஒன்றின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.
அது வெறும் குடோன் என்று தெரியவந்ததும், மற்றொரு ஷட்டரின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். அப்போது திடீரென அலாரம் ஒலிக்கத் துவங்கியது. அக்கம்பக்கம் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் சத்தம் கேட்டு எழுந்து வந்தனர். இதனால், பயந்துபோன கொள்ளையர்கள், காரில் தப்பிவிட்டனர்.
இதுபற்றி தகலவறிந்த எஸ்பி கண்ணன், டிஎஸ்பி முத்தரசு மற்றும் கிணத்துக்கடவு போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். உடனடியாக அனைத்து போலீசாருக்கும் தகவல் தரப்பட்டது. முக்கிய சாலைகளில் போலீசார் நள்ளிரவு முதல் வாகன சோதனை நடத்தினர்.
இந்நிலையில் கோதவாடி அருகே நின்றிருந்த ஆம்னி காரை ரோந்து போலீசார் சுற்றிவளைத்தனர். காரில் 2 பேர் இருந்தனர். அருகே நின்றிருந்த 3 பேர் போலீசாரை கண்டதும் ஓடினர்.
அவர்களை விரட்டிப் பிடித்த போலீசார், காரில் இருந்தவர்களையும் மடக்கினர். காரில் பெரிய ஸ்க்ரூ டிரைவர், கத்தி, வெட்டு இரும்பு, சுத்தியல், இரும்புத்தடி, மாற்று உடைகள் இருந்தன. பிடிபட்ட 5 பேரும் கிணத்துக்கடவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள், கூட்டுறவு வங்கியில் கொள்ளையடிக்க முயன்றவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை முயற்சி நடந்த வங்கியில் ரூ.1 லட்சம் பணம் மற்றும் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நகைகள் இருந்ததாக வங்கி செயலாளர் கருப்பசாமி கூறினார். அலாரம் சத்தத்தால் நகைகளும் பணமும் தப்பின.
Leave a Reply