புதுடில்லி:அமெரிக்காவின் கரன்சியான டாலர் ஆதிக்கத்துக்கு எதிராக சீனா, ரஷ்யாவை தொடர்ந்து, இந்தியாவும் குரல் எழுப்பியுள்ளது.சர்வதேச அளவில், கையிருப்பு கரன்சிகள், ஏற்றுமதி வர்த்தகம் போன்ற பல விஷயங்களுக்கும் அமெரிக்க டாலரை அடிப்படையாக வைத்துத்தான் கரன்சி மதிப்பு கணக் கிடப்படுகிறது.
ஆனால், சமீப காலமாக, டாலர் மதிப்பு சரிந்தபடி உள்ளது; இதனால், மற்ற முன்னணி வளரும் நாடுகளின் கையிருப்பு கரன்சி களின் மதிப்பும் குறைகிறது.இந்தியா உட்பட பல நாடுகளும், டாலர் கரன்சியில் தான் வெளிநாட்டு கையிருப்பு பணத்தை சேமித்து வைத்துள்ளன.
டாலர் மதிப்பு குறைவதால், நாடுகளின் அன்னியச்செலாவணி கையிருப்பு கரன்சி மதிப்பும் குறைவாக உள்ளது. அதனால், இவற்றின் வர்த்தகம், ஏற்றுமதி போன்ற எல்லாவற்றிலும் பாதிப்பு ஏற்படுகிறது. ஏற்கனவே, அமெரிக்காவில், இதுவரை இல்லாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் தான், டாலர் மதிப்பு குறைந்து வருகிறது. இது மற்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சியையும் பாதிப்பதால், அந்த நாடுகள் கவலை கொண்டுள்ளன.அதிலும், ரஷ்யா, சீனா போன்ற பெரிய நாடுகள், இப்போது அமெரிக்காவின் டாலர் ஆதிக்கத்தை எதிர்த்து, குரல் கொடுத்து வருகின்றன.
இந்த நாடுகளை தொடர்ந்து, இப்போது இந்தியாவும் குரல் கொடுத்துள்ளது.பிரதமர் மன்மோகன் சிங்கின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் தலைவராக உள்ள சுரேஷ் டெண்டுல்கர், இது குறித்து கவலை தெரிவித்துள்ளார். பிரான்சில் பொருளாதார மாநாட்டில் பங்கேற்றஅவர் இது பற்றி கூறுகையில்,”இத்தாலியில் நடக்கும் ஜி- 8 நாடுகள் மாநாட்டில் இது தொடர்பாக, பேச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.டாலர் கரன்சியில் உள்ள இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பை வேறு கரன்சிகளில் வைத்துக் கொள்வது நல்லது’ என்று தெரிவித்தார்.
“கடந்த 2007ல் இருந்து இதுவரை அமெரிக்காவின் டாலர் கரன்சி மதிப்பு தான், மற்ற நாட்டு கரன்சிகளை விட, அதிகமாக உள்ளது.பல நாட்டு அன்னியச் செலாவணி கையிருப்பு பணம் டாலரில் தான் அதிக அளவில் இருப்பு வைக்கப் பட்டுள்ளது. இந்த அளவு கடந்தாண்டு, 65 சதவீதமாக உயர்ந்துள்ளது’ என்று சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்.,) கூறியுள்ளது.
Leave a Reply