ராமநாதபுரம்: சேது சமுத்திர திட்டத்தை தனுஷ்கோடி வழியாக நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்து, அதற்கான ஆய்வுப் பணிகளை துவக்கி உள்ளது. பாக்ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் 2007ல் 2,400 கோடி ரூபாய் மதிப்பில் சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது.
“இத்திட்டத்தால் ராமர் பாலம் சேதமடைவதாக’ கூறி பல்வேறு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணையில் உள்ளது. இதற்கிடையில், “அனைத்து தரப்பு மக்களின் மனதை புண்படுத்தாமல் மாற்றுப் பாதையில் சேது சமுத்திர திட்டத்தை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்தது. அதன் படி, ராமேஸ்வரத்தை அடுத்த கோதண்டராமர் கோவில் அருகே மாற்றுப் பாதை அமைக்க முதலில் ஆலோசிக்கப்பட்டது. “இப்பணி நடக்கும் பட்சத்தில் அக்கோவிலுக்கு சேதம் ஏற்படும்’ என, ஆய்வு அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் மேலும் ஒரு புது பிரச்னையை ஏற்படுத்த விரும்பாத மத்திய அரசு, “எதிர்ப்பு இல்லாத மாற்றுப் பாதையை தேர்வு செய்ய’ அதிகாரிகளிடத்தில் வலியுறுத்தியது.
இதைத் தொடர்ந்து, பாக்ஜலசந்தி – மன்னார் வளைகுடாவை இணைக்கும் வழித்தடத்துக்கு தனுஷ்கோடி உகந்ததாக இருக்கும் என கருதப்பட்டு, மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஆய்வுப் பணியை மேற்கொள்ளுமாறு அத்துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மன்னார் வளைகுடாவில் டால்பின், கடல் குதிரை போன்ற அரிய வகை உயிரினங்கள் உள்ளதால், இதன் பாதுகாப்பு குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. மாவட்ட நிர்வாக உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “”தனுஷ்கோடியில் ஆய்வு மேற்கொள்ள சேதுசமுத்திர திட்ட அதிகாரிகள் முடிவுசெய்துள்ளனர். ஆய்வு முடிந்து, மத்திய அரசு அறிவிப்பு வந்த உடன், தனுஷ்கோடி வழியாக மாற்றுப் பாதையில் சேது சமுத்திர திட்டப் பணிகள் துவங்கும்’ என்றார். இதன் மூலம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்த ராமர் பால பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது.
Leave a Reply