தமிழக எம்.எல்.ஏ.,க்களின் மாத சம்பளம் ரூ.50 ஆயிரம்: சென்னையில் வீடு கட்ட மனை ஒதுக்கீடு

posted in: அரசியல் | 0

tblfpnnews_55652582646சென்னை: எம்.எல்.ஏ.,க்களுக்கான சம்பளம் 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டதுடன், அவர்களுக்கு சென்னைக்கு அருகே வீட்டு மனை ஒதுக்கவும் அரசு சம்மதித்துள்ளது.

சட்டசபையில் நிதியமைச்சர் அன்பழகன் கூறியதாவது: ஊதிய நிர்ணயத்தில் சில முரண்பாடுகளை அரசு ஊழியர் சங்கங்கள் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளன. அவற்றை ஆய்வு செய்து, முரண்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும். சட்டசபையை அதிக நாட்கள் நடத்த வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தியாவிலேயே சட்டசபையில் அதிக வாதங்கள் நடப்பது தமிழகத்தில் தான். அடுத்த ஆண்டு அதிக நாட்கள் நடத்த முயற்சிக்கப்படும். எம்.எல்.ஏ.,க்களுக்கு தற்போது 3,000 ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. அது 8,000 ரூபாயாக உயர்த்தப்படும். கடந்த ஏப்ரல் மாதம் எம்.எல்.ஏ.,க்களுக்கான வாகனப்படி 5,000 ரூபாயில் இருந்து 20 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இது இன்னும் கிடைக்காதவர்களுக்கு விரைவில் கிடைக்கும்.

இதன்படி, எம்.எல்.ஏ.,க்களின் மொத்த சம்பளம் 45 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயரும். இதனால், அரசுக்கு ஆண்டுக்கு 1.21 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கான ஓய்வூதியம், 8,000 ரூபாயில் இருந்து 10 ஆயிரமாக உயர்த்தப்படும். 4,000 ரூபாய் ஓய்வூதியமாக பெறும், ஒரு ஆண்டுக்கு குறைவாக எம்.எல்.ஏ., பதவி வகித்தவர்களுக்கும் இந்த உயர்வு நீட்டிக்கப்படும். இதனால் அரசுக்கு 2.25 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். மறைந்த எம்.எல்.ஏ.,க்களின் வாரிசுகளுக்கு குடும்ப ஓய்வூதியமாக 2,000, 3,000, 4,000 என மூன்று நிலைகளில் வழங்கப்படுகிறது. இந்த வேறுபாடுகளை போக்கி, அனைவருக்கும் ஒரே வீதத்தில் குடும்ப ஓய்வூதியமாக 5,000 ரூபாய் வழங்கப்படும். முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தும் போது, குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு அதில் 50 சதவீதம் உயர்த்தப்படும். அரசு மருத்துவமனைகளில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு இலவச சிகிச்சை அளிப்பதை போல, மறைந்த எம்.எல்.ஏ.,க்களின் வாரிசுகளுக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்படும். இந்த சம்பள உயர்வுகள் அனைத்தும் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதியில் இருந்து அமல்படுத்தப்படும்.

சென்னைக்கு அருகே குறிப்பிட்ட இடத்தில் எம்.எல்.ஏ.,க்களுக்கு வீட்டுமனை வேண்டுமென ஞானசேகரன் கோரியிருந்தார். 105 எம்.எல்.ஏ.,க்களின் கையெழுத்தை பெற்றுத் தந்துள்ளார். இன்று நடக்கவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில், வீட்டுமனை ஒதுக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம் வழங்க பரிசீலிக்கப்படும். வாரியத்தின் விதிகளுக்கு உட்பட்டு, நிர்ணயிக்கும் விலையை எம்.எல்.ஏ.,க்கள் செலுத்த ஒப்புக்கொள்ள வேண்டும். எம்.எல்.ஏ.,க்களுக்கான தொகுதி நிதி, 1.50 கோடியில் இருந்து 1.70 கோடி ரூபாயாக உயர்த்தப்படும். இவ்வாறு அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.

இதற்கு வரவேற்பு தெரிவித்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஞானசேகரன் பாராட்டிப் பேசினார். அப்போது முதல்வர் குறுக்கிட்டு, “”சட்டசபையில் அனைவரும் பாராட்டத்தக்க ஓர் அறிவிப்பை வெளியிட்டதற்கு ஞானசேகரன் நன்றி கூறுகிறார். அவர் காலனி கட்டும் அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கிறார். ஆனால், எம்.எல்.ஏ.,க்களுக்கான இதர அறிவிப்புகளுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்ட எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஏன் வாய்மூடி இருக்கிறார்?” என்று கேட்டார். இதற்கு அ.தி.மு.க.,வினர் யாரும் பதிலளிக்கவில்லை. மார்க்சிஸ்ட் உறுப்பினர் பாலபாரதி எழுந்து, “”முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தியதற்கு நன்றி. ஆனால், தற்போதுள்ள எம்.எல்.ஏ.,க்களுக்கு சம்பள உயர்வு தேவையில்லை,” என்றார். இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *