புழல் சிறையில் இருந்து திருத்தணி நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி, திடீரென போலீசால் சுடப்பட்டு இறந்தான். மற்றொரு கைதிக்கு கையில் காயம் ஏற்பட்டது. தனது தாயின் மரணத்துக்கு பழி வாங்க, கைதியை போலீஸ்காரரே சுட்டுக் கொன்றார் என தெரியவந்துள்ளது. அந்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம், அரக்கோணம் தாலுகா, பழனிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவன் தனசேகர் (24). இவன் மீது பல கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவன் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். அதே பகுதியைச் சேர்ந்தவன் சீமோன் (18). தனசேகரும், சீமோனும் நண்பர்கள். இருவரும் கடந்த ஆண்டு திருத்தணி, ஆர்.கே. பேட்டை ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்மையார் குப்பம், எஸ்.அக்ரஹாரம், கோரமங்கலம் பகுதிகளில் கொலை, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள். இவர்கள் இருவரும், வயல்வெளியில் விவசாய வேலை செய்து வந்த மற்றும் மாடுகள் மேய்த்துக்கொண்டிருந்த மூதாட்டிகளான தனம்மாள், முனியம்மாள், பொதட்டூர் பேட்டை காவல் நிலைய தனிப்பிரிவு போலீஸ்காரரின் தாயார் முனியம்மாள் ஆகியோரை கொலை செய்து, அவர்கள் அணிந்திருந்த நகைகளை கொள்ளை அடித்தனர். மேலும், கடந்த ஜனவரி மாதம் திருத்தணி எம்.ஜி.ஆர்., நகரில் இந்திராணி(45) என்பவர் விறகு வெட்டிக் கொண்டிருக்கும் போது அவரிடம் இருந்து இரண்டு சவரன் செயினை பறித்தனர். அப்போது, அப்பகுதி மக்கள் இவர்களை பிடித்து திருத்தணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
காவல்துறை விசாரணையில், அவர்கள் மூதாட்டிகளை கொலை செய்தது தெரியவந்தது. குண்டர் சட்டத்தில் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். நேற்று காலை 11 மணியளவில் தனசேகர், சீமோன், அப்பு, சின்னகேசவன், முருகன், ராமலிங்கம் ஆகிய ஆறு கைதிகளை புழல் சிறையில் இருந்து திருத்தணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினர் வேனில் கைவிலங்கிட்டு கொண்டு சென்றனர். மதியம் 12.30 மணியளவில், திருப்பதி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கனகம்மாசத்திரம் அடுத்த பட்டரைதாங்கல் என்ற இடத்தில் சென்றபோது, வேனில் இருந்த தனசேகர் மற்றும் சீமோன் தப்பிக்க முடிவு செய்தனர். அருகே பாதுகாவலராக இருந்த முருகன் என்பவரை தனசேகர் கைவிலங்குடன் தாக்கி, தப்பி ஓட முயன்றான். அதைத் தடுக்க முயன்ற முருகன், தனது துப்பாக்கியால் தனசேகரை சுட்டார். கழுத்தில் குண்டு பாய்ந்து, சம்பவ இடத்திலேயே தனசேகர் இறந்தான். அருகில் இருந்த சீமோனுக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது.
காஞ்சிபுரம் டி.ஐ.ஜி., துரைராஜ், திருவள்ளூர் எஸ்.பி., சாரங்கன், ஏ.டி.எஸ்.பி., சிற்றரசு உட்பட 20க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். எஸ்.பி., சாரங்கன் கூறும்போது, ”போலீஸ்காரர் முருகனிடம் கேட்டபோது, ”கைதி தப்பி ஓட நினைத்து என்னை தாக்கினான். அதனால் தான் சுட்டுக் கொன்றேன்” என்று கூறுகிறார். இச்சம்பவத்தின் விசாரணை திருத்தணி ஆர்.டி.ஓ., சந்திரசேகரனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நடந்த சம்பவத்தின் அறிக்கையை அவர் கொடுப்பார்,” என்றார்.
பின்னர் திட்டமிட்டு கொலை நடத்தியதாக, போலீஸ்காரர் முருகன் கைது செய்யப்பட்டார். ரவுடிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்ற மற்றொரு போலீஸ்காரர் அழகேசன், ”ரவுடி தனசேகர் யாரையும் தாக்கவில்லை. போலீஸ்காரர் முருகன் தான் ரவுடியை சுட்டுக் கொன்றார்” என, கனகம்மாசத்திரம் போலீசில் புகார் செய்தார்.இதையடுத்து, போலீஸ்காரர் முருகன், நேற்றிரவு கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். தனது தாய் கொலை வழக்கில் தொடர்புடைய தனசேகரை, போலீஸ்காரர் முருகன் திட்டமிட்டு கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
Leave a Reply