தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியாவுக்கு, அமெரிக்கா எல்லா உதவிகளும் செய்யும்: ஹிலாரி கிளிண்டன்

posted in: உலகம் | 1

18_010இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் நிருபர்களுக்கு பேட்டியளித்த பொழுது தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியாவிற்கு அமெரிக்கா அனைத்துவித உதவிகளும் செய்யும் என்று கூறியுள்ளார்.


அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் 5 நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

மும்பை தாஜ் ஓட்டலில் தங்கியுள்ள அவருக்கு சிறப்பு அதிரடிப்படை உள்பட 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இன்று (சனி) காலை அவர் தாஜ் ஓட்டலில் வைக்கப் பட்டுள்ள மும்பை தாக்குதல் தொடர்பான நினைவு புத்தகத்தில் தன் கருத்துக்களை எழுதினார். மும்பை தாக்குதலின்போது பாதிக்கப்பட்ட தாஜ் ஓட்டல் ஊழியர்களிடம் சிறிது நேரம் அவர் பேசினார். அதன்பிறகு தாஜ் ஓட்டல் அரங்கில் இந்திய தொழில் அதிபர்களை ஹிலாரி கிளிண்டன் சந்தித்து பேசினார்.

இந்த கூட்டத்தில் இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்கள் ரத்தன்டாடா, முகேஷ் அம்பானி, ஜாம்ஷெட் என்.கோத்ரேஜ், சுதாமூர்த்தி, அசோக்கங்குலி, சந்தகூச்கர், ஸ்வாதி பிரமல், ஓ.பி.பட், ஆர்.கே.கிருஷ்ணகுமார், அம்ரிதா படேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்களிடம் ஹிலாரி கிளிண்டன் தொழில் வளர்ச்சி குறித்து பேச்சு நடத்தினார்.

சர்வதேச பொருளாதார மந்தநிலை குறித்தும் இந்திய தொழில் அதிபர்களுடன் ஹிலாரி கிளிண்டன் விவாதித்தார். அவுட்சோர் சிங் பாதிப்பு குறித்து ஹிலாரியிடம் இந்திய தொழில் அதிபர்கள் எடுத்துரைத்தனர்.

தொழில் அதிபர்களுடனான சந்திப்பு முடிந்த பிறகு ஹிலாரி கிளிண்டன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

மும்பை நகரம் எனக்கு மிகவும் பிடித்த நகரமாகும். இந்த நகருக்கு மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

எகிப்தில் நடந்த அணிசேரா நாடுகள் மாநாட்டில் இந்தியாவும், பாகிஸ்தானும் கூட்டறிக்கை விட்டதை அமெரிக்கா வரவேற்கிறது. பாகிஸ்தானுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும்படி நாங்கள் வற்புறுத்தமாட்டோம். ஏனெனில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் இறையாண்மையை நாங்கள் மதிக்கிறோம்.

மும்பை தாக்குதல் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி பாகிஸ்தான் தண்டிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது பற்றி இந்தியாவும் பாகிஸ்தானும்தான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அதில் எங்கள் தலையீடு இருக்காது.

மும்பையில் கடந்த ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபிறகு அமெரிக்கர்கள் இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளனர். இந்தியா- அமெரிக்காவின் புதுநட்பு புது யுகத்துக்குள் எங்களை நுழைய வைத்துள்ளது. தீவிர வாதத்தை ஒழிப்பதில் அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து செயல்படுகின்றன.

தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியா மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளுக்கும் அமெரிக்கா எல்லா உதவிகளையும் செய்து கொடுக்கும்.

இந்தோனேசியா ஓட்டலில் குண்டுகள் வெடித்து இருப்பது தீவிரவாதம் வளர்ந்து இருப்பதை காட்டுகிறது. தீவிரவாதம் வேரறுக்கப்பட வேண்டும்.

எங்களுடன் உறவு வைத்துள்ள ஒவ்வொரு நாடும், தங்கள் மண்ணில் தீவிரவாதம் உருவாவதை தடுக்க, மிக மிக கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

நமது குழந்தைகளுக்கு நல்ல உலகத்தை உருவாக்கி கொடுக்க முடியும் என்று நம்புகிறேன்.

இந்திய தொழில் அதிபர்களை சந்தித்து பேசியது மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. தீவிரவாதிகளால் பாதிப்பு அடைந்தவர்களை சந்தித்ததும் நெகிழ்ச்சியான அனுபவமாகும்.

உலகில் அமைதியும், வளர்ச்சியும் பெற எல்லா நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம்.

இவ்வாறு ஹிலாரி கிளிண்டன் கூறினார்.

மும்பையில் உள்ள புனித சேவியர் கல்லூரியில் இன்று பிற்பகல் நடைபெறும் விழாவில் ஹிலாரி கலந்து கொள்கிறார். அதில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் நடக்கும் கல்வி குறித்த விவாதத்தில் அவர் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் என்.ஜி.ஓ. அமைப்புகளுடன் தொடர் புடைய நடிகர் அமீர்கானும் கலந்து கொள்கிறார்.

நடிகர் அமீர்கான் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இன்று இரவு மும்பையில் நடக்கும் வேறுசில நிகழ்ச்சிகளில் ஹிலாரி பங்கேற்கிறார். இதையடுத்து மும்பையில் ஹிலாரி செல்லும் பாதைகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று இரவு மும்பை யில் நடக்கும் வேறுசில நிகழ்ச்சிகளில் ஹிலாரி பங்கேற்கிறார். இதையடுத்து மும்பையில் ஹிலாரி செல்லும் பாதைகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஹிலாரி கிளிண்டன் நாளை (ஞாயிறு) டெல்லி செல்கிறார். பிரதமர் மன்மோகன்சிங் உள்பட மூத்த அமைச்சர்களுடன் பேச்சு நடத்துகிறார்.

பா.ஜ.க. தலைவர் அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோரையும் ஹிலாரி சந்தித்து பேச உள்ளார். இதையடுத்து டெல்லியிலும் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *