இஸ்லாமாபாத் : சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராக வேண்டியுள்ளதால் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப், லண்டனில் இருந்து நாடு திரும்புவதை தவிர்க்க திட்டமிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆட்சியைக் கவிழ்த்து அதிபரானவர் முஷாரப். தலைமை நீதிபதி இப்திகார் அலி சவுத்ரி உள்ளிட்ட 60க்கும் அதிகமான நீதிபதிகளை டிஸ்மிஸ் செய்து, 2007ம் ஆண்டு அவசர நிலை பிறப்பித்தார்.முன்னாள் பிரதமர்கள் பெனசிர் புட்டோவும், நவாஸ் ஷெரீப்பும் இணைந்து பொதுத் தேர்தலில் பிரசாரம் செய்ததன் விளைவாக, முஷாரப் ஆதரவு கட்சிகள் தோல்வியைத் தழுவின. பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆட்சியைப் பிடித்தது.ஆளும் கூட்டணிக் கட்சிகளின் நிர்பந்தம் காரணமாக முஷாரப் பதவி விலகினார். பதவி நீக்கம் செய்யப்பட்ட இப்திகார் அலி சவுத்ரி மீண்டும் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார்.
இந்நிலையில், பாகிஸ்தானில் அவசர நிலையை கொண்டு வந்ததை எதிர்த்தும், நீதிபதிகளை டிஸ்மிஸ் செய்ததைக் கண்டித்தும், வக்கீல் சங்கங்களின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்யப்பட்டது.இந்த மனுவை தலைமை நீதிபதி இப்திகார் அலி சவுத்ரி தலைமையிலான 14 பேர் கொண்ட பெஞ்ச் விசாரித்தது. கோர்ட்டில் நாளை ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, முஷாரப்பிற்கு இந்த பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.முஷாரப் தற்போது லண்டனில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். நாடு திரும்பினால் இன்னும் பல வழக்குகளை சந்திக்க வேண்டி வருமென அவரது ஆதரவாளர்கள் எச்சரித்துள்ளனர். இதையடுத்து, அவர் நாடு திரும்புவதை தள்ளிப் போட்டுள்ளார்.
லண்டனில் முஷாரப்புக்கு சொந்த வீடு உள்ளது. அதில் அவர் தங்கிக் கொள்வார். இல்லையென்றால், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மகன் பிலால் வீடு உள்ளது. அங்கு தங்கிக் கொள்வதற்கு வசதி உள்ளது. சிகாகோவில் முஷாரப்பின் சகோதரர் இருக்கிறார். அங்கும் அவர் தங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. செப்டம்பர் மாதம் வரை அவர் நாடு திரும்ப மாட்டார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply