இங்கிலாந்து, நவேடாவைச் சேர்ந்த டன்யா ஆங்கஸ்ஸை பார்த்தால் வாழ்க என்று மட்டுமே சொல்ல வேண்டும். வளர்க என்று சொன்னால் நம்மை வார்த்தைகளால் வறுத்தெடுத்துவிடுவார் அவர்.
உடல் வளர்ச்சியை தடுக்க முடியாமல் திண்டாடி வருபவரைப் பார்த்து அப்படிச் சொன்னால் ஏன்
கோபம் வராது.
30 வயதான டன்யா கடந்த 12 வருடங்களில் 10 இன்ச் வளர்ந்திருக்கிறார். அதற்கேற்ப உடல் எடையும்
பலமடங்கு அதிகரித்துவிட்டது. தற்போது அவருடைய உடல் எடை 215 கிலோ சொச்சம். இவருடைய உடலின் அபார வளர்ச்சியைத் தடுக்கமுடியாமல் மருத்துவர்கள் திண்டாடி வருகிறார்கள்.
உலகின் அரிய வகை நோயான ‘அக்ரோ மெக்லியா’வால் டன்யா பாதிக்கப்பட்டுள்ளார். இதனால்
இவருடைய உடலில் வளர்ச்சிக்கான ஹார்மோன்கள் கன்னாபின்னாவென்று உற்பத்தி ஆகின்றன. 18
வயதில் 5.8 அடி உயரமிருந்தவர் இப்போது 6.6 அடி மனுஷியாக உயர்ந்து நிற்கிறார்.
உயரமும் எடையும் அதிகரித்தபடியே உள்ளவர்கள் உலகில் பரவலாக உள்ளனர் என்றாலும்,
அதிகப்படியான வளர்ச்சியைத் தடுத்து ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் மருந்துகள் கூட
டன்யாவிடம் எடுபடவில்லை என்பது தான் மருத்துவர்களுக்கே ஆச்சரியத்தை வரவழைத்திருக்கிறது.
மருந்துகளால் உடல் வளர்ச்சியைத் தடுக்க முடியாத ஒரே பெண்மணி டன்யாதான் என்று மருத்துவ
உலகம் அறிவித்துள்ளது.
ஆனாலும் தான் நம்பிக்கையுடன் காத்திருப்பதாகச் சொல்கிறார் டன்யா.
“நம்பிக்கை இல்லாவிட்டால் எதையும் சாதிக்கமுடியாது. நான் மருத்துவர்களை நம்புகிறேன். என் அபரித உடல் வளர்ச்சியை அவர்கள் நிச்சயம் தடுத்து நிறுத்துவார்கள். நானும் ஒரு நாள் சாதாரண பெண்ணாக உலா வருவேன்”என்கிறார் அவர்.
உள்ளூர் மக்கள் கூட தன்னை புரிந்துகொள்ளாது கிண்டல், கேலி செய்வதைத்தான் டன்யாவால்
தாங்கிக்கொள்ள முடியவில்லை.
தன் தங்கையின் நிலையை எண்ணி கண் கலங்கும் சகோதரி கரன்,
“எங்களால் எதுவும் செய்ய இயலாது என்று மருத்துவர்கள் கூறுகையில் மனசு வலிக்கிறது. இன்னும்
இரண்டு மாதத்திற்குத்தான் உன் தங்கை உயிருடன் இருப்பாள் என்று, கடந்த எட்டு மாதங்களுக்கு
முன்பாக ஒரு மருத்துவர் கூறினார். நாங்கள் நம்பவில்லை. இதுவரை 10 லட்சம் ரூபாய்வரை
செலவழித்துவிட்டோம். எங்கள் சேமிப்பெல்லாம் கரைந்துவிட்டது. ஆனால், அவளுடைய உடல்
வளர்ச்சியைக் குறைக்கும்வரை எங்கள் முயற்சியும் குறையாது”என்கிறார் கரன்.
கடைசியாகப் பார்த்த மருத்துவர் மட்டும் நம்பிக்கை அளிக்கிறார். கடந்த மூன்று மாதங்களாக அவரிடம்
சிகிச்சை எடுத்துக்கொள்ளும் டன்யா, தன்னுடைய தோற்றத்தில் மாற்றம் ஏற்படும் என்று
நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.
நான் வளர வேண்டாமே மம்மி என்று கெஞ்சும் 30 வயது குழந்தைக்கு, அந்தக் கடவுள் உதவக்
கூடாதா?
Leave a Reply