பணிநீக்க உத்தரவால் வேதனையில் தவிக்கும் தற்காலிக டைப்பிஸ்டுகள்

posted in: மற்றவை | 0

tblgeneralnews_16892206669மதுரை: அரசுத் துறைகளில் தற்காலிக பணியில் உள்ள டைப்பிஸ்டுகள் அரசின் பணிநீக்க உத்தரவால் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்களில் பணியாற்ற மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் இவர்கள் பணி அமர்த்தப்பட்டனர்.

10 (ஏ) 1 என்ற தற்காலிக அடிப்படையில் நான்கு ஆண்டுகளுக்கு முன் பணியில் நியமிக்கப்பட்டோரில் பலர் 45 வயதை கடந்தவர்கள். அரசுப் பணி என்பதால் 3,200 பேர் வேறு வாய்ப்புகளை துறந்துவிட்டு இப்பணியில் சேர்ந்தனர். இவர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, அரசுப் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை, டைப்பிஸ்டுகளை பணிநியமனம் செய்வதற்காக சிறப்புத் தேர்வு நடத்த உத்தரவிட்டது. சமீபத்தில் தற்காலிக பணியாளர்களை தேர்வு செய்து நிரந்தரப் பணியில் அமர்த்தியது போல செய்ய ஏற்பாடுகள் நடந்தன. டி.என்.பி.எஸ்.சி., மூலம் ஆக., 30ம் தேதி தேர்வு நடத்த ஜூன் 18ம் தேதி விளம்பரமும் செய்யப்பட்டது.

இதில் ஸ்டெனோ டைப்பிஸ்டுகள் 260 பேர், டைப்பிஸ்டுகள் 2,144 பேரை தேர்வு செய்ய இத்தேர்வு நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தற்காலிக டைப்பிஸ்டுகளாக பணியாற்றுவோர் மகிழ்ச்சி அடைந்தனர். உடனே தேர்வுக்காக தயாராகி வந்தனர். ஆனால், அவர்கள் மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. சமீபத்தில் பல்வேறு அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அவர்களை பணிநீக்கம் செய்வதாக (டெர்மினேஷன்) அரசு உத்தரவுகளை அனுப்பி வருகிறது. அரசின் இந்த உத்தரவை எதிர்த்து திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் உட்பட சில மாவட்டங்களைச் சேர்ந்த 74 பேர் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

மனுக்களை விசாரித்த நீதிபதி, “தற்போதைய நிலையே தொடர வேண்டும்’ என, தீர்ப்பு வழங்கினர். இந்நிலையில், கோர்ட்டுக்கு செல்லாத மற்றவர்கள் அரசின் பணிநீக்க உத்தரவால் கடும் மனஉளைச்சலில் உள்ளனர். அரசுப் பணியென்று நம்பி வந்த தங்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் தேர்வை அறிவித்தனர். ஆனால், திடீரென பணிநீக்க உத்தரவும் வந்துவிட்டதால் தேர்வுக்கு தயாராக முடியாத மனநிலையில், வருத்தத்தில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *