பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் இலவசக் கல்வி: தமிழக அரசு அறிவிப்பு

posted in: கல்வி | 0

dmk_kkssr“அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலைக் கல்லூரிகளில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் இலவசக் கல்வி அளிக்கப்படும்” என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவித்தார்.


சட்டப் பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அவர் பேசியது:

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு பட்டப்படிப்பில் 98,265 பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களில் 59,190 பேர் அரசு நிபந்தனைகளின்படி இலவச கல்வித் திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர்.

மீதமுள்ள மாணவ, மாணவிகள் “பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். குடும்பத்தில் முதல் பட்டதாரியாக இருக்க வேண்டும்” என்ற நிபந்தனை காரணமாக இலவசக் கல்வி பெற முடியிவில்லை.

இனி எந்த நிபந்தனையும் இன்றி பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகள் அனைவருக்கும் இலவசக் கல்வி அளிக்கப்படும். இதனால் இதுவரை இலவசக் கல்விபெற முடியாத 39,075 மாணவ, மாணவிகளும் பயனடைவார்கள். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 3.70 கோடி கூடுதல் செலவாகும்.

விடுதிகளில் 4,000 இடங்கள் அதிகரிப்பு: பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்காக அரசு நடத்தும் விடுதிகளில் இப்போது 69,016 மாணவ, மாணவிகள் தங்கிப் படிக்கின்றனர். இவ்விடுதிகளில் 4 ஆயிரம் கூடுதல் இடங்கள் ஏற்படுத்தப்படும். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 2 கோடி கூடுதல் செலவாகும்.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சிறு கடனாக இப்போது ரூ. 10 ஆயிரம் வழங்கப்படுகிறது. இனி ரூ. 25 ஆயிரம் வழங்கப்படும்.

நரிக்குறவர் இனக் குழந்தைகள் பள்ளி செல்வதை ஊக்குவிக்கும் வகையில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் நரிக்குறவர் நலவாரிய உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 50 வீதம் 10 மாதங்களுக்கு ரூ. 500-ம், 6 முதல் 9 வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 100 வீதம் 10 மாதங்களுக்கு ரூ. 1,000 வழங்கப்படும்.

இலவச கலர் டிவி:பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினருக்காக அரசு நடத்தும் 1,206 விடுதிகளுக்கும், முஸ்லிம் மாணவிகளுக்கான 5 விடுதிகளுக்கும் இவ்வாண்டு இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்படும்’ என்றார் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *