பிளஸ் 2 தேர்வு மறுமதிப்பீட்டில் திருப்பம்: முதலிடம் பெற்றார் ஊத்தங்கரை மாணவர்

posted in: கல்வி | 0

tblfpnnews_557672978ஊத்தங்கரை: ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவன் பாலமுருகன், பிளஸ் 2 மறுமதிப்பீட்டில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளான்.

திருப்பத்தூரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி ருக்குமணி. இவர்களது மகன் பாலமுருகன். இவர், ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதினார். மாநில அளவில், முதலிடத்தை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கல்வி பயின்ற பாலமுருகனை பெற்றோரும், ஆசிரியர்களும் ஊக்குவித்தனர். பாலமுருகனும் மாநில அளவில் “ரேங்க்’ கிடைக்கும் என்ற நம்பிக்கையோடும், எதிர்பார்ப்போடும் காத்திருந்தார்.

கடந்த மே மாதம் 14 ம் தேதி, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில், ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி சிஞ்சு உட்பட மூன்று மாணவர்கள் 1,183 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடமும், கிருஷ்ணகிரி, தர்மபுரி விஜய் வித்யாலயா இரு மாணவர்கள் 1,182 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாமிடமும், ராசிபுரம் எஸ்.ஆர்.வி.,பள்ளி மாணவர் உள்ளிட்ட நான்கு மாணவர்கள் 1,181 மதிப்பெண் பெற்று மாநில அளவில் மூன்றாமிடமும் பெற்றனர்.

மாநில ரேங்க் பெற்ற மாணவர்களுக்கு தமிழக அரசின் சலுகைகளும், உயர் படிப்பு படிக்கத் தேவையான அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டன. முதல்வர் கருணாநிதி மாணவர்களை பாராட்டி, பரிசு வழங்கினார். மாநில ரேங்க் எதிர்பார்த்த ஊத்தங்கரை ஸ்ரீ வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவன் பாலமுருகன் 1,176 மதிப்பெண் பெற்றதால் அதிர்ச்சி அடைந்தார். அவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் தமிழ் 187, ஆங்கிலம் 193, இயற்பியல் 200, வேதியியல் 197, உயிரியல் 199, கணிதம் 200 என மொத்தம் 1,176 மதிப்பெண் பெற்றிருந்தார்.

மாநில ரேங்க் கிடைக்காததால், அதிர்ச்சி அடைந்த மாணவன் பாலமுருகன், தமிழ் விடைத்தாளை மறு மதிப்பீடு செய்யக்கோரி, அரசு தேர்வாணையத்துக்கு விண்ணப்பித்தார். தமிழ் விடைத்தாள் நகலை மாணவன் பாலமுருகன் மற்றும் பெற்றோர் வாங்கிப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதில், தமிழ் விடைத்தாளில் எட்டு மதிப்பெண் விடுபட்டிருந்தது. இதையடுத்து, மறுமதிப்பீட்டுக்கு பின் பாலமுருகன் தமிழ் பாடத்தில் 195 மதிப்பெண் பெற்றார். அவரது மொத்த மதிப்பெண் ஆயிரத்து 184ஆக உயர்ந்தது. மறுமதிப்பீட்டுக்கு பின் அவருக்கு திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது.

பிளஸ் 2 மறுமதிப்பீட்டின் படி மாணவன் பாலமுருகன் மாநில அளவில் முதலிடமும், ஏற்கனவே முதலிடத்தில் இருந்த நான்கு மாணவர்கள் இரண்டாமிடத்திலும், இரண்டாமிடத்தில் இருந்த இரு மாணவர்கள் மூன்றாமிடத்திற்கும், மூன்றாமிடத்தில் இருந்த நான்கு மாணவர்கள் நான்காமிடத்திலும் தேர்ச்சி பெற்றனர். தேர்வாணையத்தின் குளறுபடியால் மாநில ரேங்க் பெற்ற மாணவன் பின்னுக்கு தள்ளப்பட்டு, மறுமதிப்பீட்டுக்கு பின் முன்னுக்கு வந்து மாநில ரேங்க் பெற்றார்.

இதனால், மாணவன் பாலமுருகன் மன உளைச்சலுக்கு ஆளானார். “மாநில ரேங்க் பெற்ற பாலமுருகனுக்கு அரசின் அனைத்து உதவிகளும் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதோடு, கல்வித்துறை, மாணவன் பாலமுருகனை மாநில ரேங்க் பெற்றவர் என அறிவிக்க வேண்டும்’ என, பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *