பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க சட்டம்: அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

posted in: கோர்ட் | 0

28_002‘‘பிளாஸ்டிக் பொருட்களின் விளைவுகளை தமிழக அரசு கடுமையாக கருதி, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் (யூஸ் அண்ட் த்ரோ) பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கும் வகையில் விரைவில் சட்டம் கொண்டுவர வேண்டும்’’ என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

சென்னையில் உள்ள சேவாமேன் அறக்கட்டளை தலைவர் நாராயணன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் ஏராளமாக பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், மக்களின் உடல்நலம், சுற்றுச்சூழல் பாதிக்கிறது. எனவே, பிளாஸ்டிக் பைகள், ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் கப், தட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும். குறிப்பாக, 150 மைக்ரான் அளவுக்கு கீழே உள்ள பிளாஸ்டிக் பொருட்கள், உணவுகளை சேமித்து வைக்கும் பிளாஸ்டிக் பானைகளுக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு நாராயணன் கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் முருகேசன், வெங்கட்ராமன் ஆகியோர் விசாரித்தனர். அரசு பிளீடர் ராஜா கலிபுல்லா ஆஜராகி கூறியதாவது:

சுற்றுலா தலங்கள், கோயில்கள், கடற்கரைகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த ஏற்கனவே அரசு தடை விதித்துள்ளது. இப்போதுள்ள விதியில் 20 மைக்ரான் அளவில் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரித்தால் போதும் என்று குறிப்பிட்டுள்ளது. இதை மாற்ற, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச் சூழல் நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

அதன்பின், பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வது குறித்து, 2003ம் ஆண்டு தமிழக அரசு ‘மாதிரி மசோதா’வை தயாரித்துள்ளது. விரைவில் அதற்கான சட்டம் கொண்டுவர உள்ளோம்.இவ்வாறு அரசு பிளீடர் கூறினார்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. பிறகு, நீதிபதிகள் அளித்த தீர்ப்பு விவரம்:

பிளாஸ்டிக் பொருட்கள் விவகாரத்தில், மத்திய, மாநில அரசு விதிமுறைகளை மீறி நாங்கள் உத்தரவு பிறப்பிக்க விரும்பவில்லை. 150 மைக்ரான் அளவுக்கு கீழுள்ள பிளாஸ்டிக் பொருட்களை தயாரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட விரும்பவில்லை.

எனினும், பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படக் கூடிய விளைவுகள் அதிகமாக உள்ளது என்பதை கவனத்தில் கொண்டுள்ளோம். கடந்த 2003ல் மசோதா தயாரிக்கப்பட்டதாக அரசு சார்பில் கூறப்பட்டது. ஆறு ஆண்டுகள் ஆகியும் இதில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. மசோதா சட்டமாக்கப்படவும் இல்லை.

பிளாஸ்டிக் பொருட்களின் விளைவுகளை தமிழக அரசு கடுமையாக கருதி, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் (யூஸ் அண்ட் துரோ) பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கும் வகையில் விரைவில் சட்டம் கொண்டுவர வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழலும், மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது என்பதை அரசு கடுமையாக கருத வேண்டும். எனவே, இதற்காக தமிழக அரசு மற்ற மாநிலங்களில் உள்ளதுபோல, 60 மைக்ரான் அளவுக்கு கீழே உள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும்.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலான கமிட்டி, பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்பாக அளித்த பரிந்துரையை அரசு ஏற்க வேண்டும். விதிப்படி பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கப்படுகிறதா? என்பதை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கண்காணிக்க உத்தரவிடுகிறோம்.

தமிழக அரசும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் சேர்ந்து பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் விளைவுகளை மக்களுக்கு எடுத்து கூறி, அதை பயன்படுத்துவதை குறைக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *